×

முன்னாள் போலீஸ் கமிஷனர் எங்கே? மே.வங்க தலைமை செயலகத்தில் சிபிஐ தேடுதல்: தலைமை, உள்துறை செயலர்களுக்கு கடிதம்.

கொல்கத்தா: சாரதா  சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ்  குமார் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி,  மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று  சென்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி  நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. இந்த  வழக்கில் சிபிஐயினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் கொல்கத்தா போலீஸ்  கமிஷனர் ராஜிவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொல்கத்தா  உயர் நீதிமன்றம் விலக்கி கொண்டது. அதோடு, வழக்கில் ஆஜராக சிபிஐ பிறப்பித்த  சம்மனை ரத்து செய்யவும்  மறுத்துவிட்டது.  இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகாததால்  ராஜிவ் குமாரைத் தேடி சிபிஐ  அதிகாரிகள் அவரின் வீடு, அரசு இல்லத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு  அவர் இல்லாததால், அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள சிபிஐ அதிகாரிகள் நேற்று மேற்கு வங்க மாநில தலைமை  செயலகத்துக்கு சென்றனர்.

அப்போது, மாநில அரசின் தலைமைச் செயலர்  மலாய் டே, உள்துறை செயலர் அலபான் பந்தோபாத்யாயா ஆகியோரிடம் சிபிஐ  அதிகாரிகள் கடிதம் அளித்தனர். அக்கடிதத்தில், `ராஜிவ் குமார்  எங்கிருக்கிறார்?, எதன் அடிப்படையில் அவருக்கு ஒரு மாத விடுப்பு  அளிக்கப்பட்டுள்ளது?, தற்போது சிஐடி பிரிவின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக  பதவியில் இருக்கும் அவர் எப்போது பணிக்கு திரும்புவார்?’ என்பன குறித்து  சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  அதில், `திங்கட்கிழமை (நேற்று) மதியம் 2 மணிக்குள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு  ஆஜராக வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்கிடையே, ராஜிவ் குமார் சிபிஐ அதிகாரிகளுக்கு அனுப்பிய இ-மெயிலில், தனிப்பட்ட காரணத்துக்காக வரும்  25ம் தேதி வரை விடுப்பில் சென்றுள்ளதால், விசாரணைக்கு ஆஜராக ஒருமாத  கால அவகாசம் கோரி உள்ளதாக கூறப்படுகிறது.



Tags : police commissioner ,Home Secretaries ,CBI ,headquarters ,WB ,search , Former Police Commissioner, Mayor General Secretariat, CBI Search, Chief, Home Secretaries, Letter.
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...