×

பெங்களூரு மாநகராட்சி திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை : தலைமை செயலாளருக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவு

பெங்களூரு: பெங்களூருவில் மாநகராட்சி செயல்படுத்தி வரும் ஹெலிவேடட் காரிடார் சாலை, குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டியது மற்றும் சுரங்க கழிவு சேமிப்பு திட்டங்களில் நடந்துள்ள முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்படி மாநில தலைமை செயலாளருக்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு மாநகராட்சி சார்பில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்டங்களில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளதாக மாநகர பாஜ செய்தி தொடர்பாளர் என்.ஆர்.ரமேஷ் அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக ஊழல் தடுப்பு படையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த நான்காண்டுகளில் மாநகராட்சியில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான விவரங்களை முதல்வர் எடியூரப்பாவிடம் கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். குறிப்பாக பெங்களூரு மாநகரில் மேற்கொண்டுவரும் ஹெலிவேடட் காரிடார் சாலை அமைக்கும் திட்டத்தில் ரூ.6,855 கோடி செலவில் 21.54 கி.மீட்டர் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்த டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே டெண்டரை ரத்து செய்துவிட்டு, உண்மையான திட்ட மதிப்புடன் கூடிய புதிய டெண்டர் விட வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினார்.

அதேபோல் கடந்த 2017-18ம் நிதியாண்டில் கர்நாடக மாநில குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 49 ஆயிரத்து 368 குடும்பங்களுக்கு ரூ.2,662 கோடி செலவில் வீடுகள் கட்டி கொடுப்பதற்காக விடப்பட்டுள்ள டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்தும் விசாரிக்க வேண்டும். மேலும் பெங்களூரு மாநகரில் சேரும் கழிவுகளை சுரங்க பள்ளம் தோண்டி சேமிக்கும் நோக்கத்தில் அன்டர் கிரவுண்ட் டஸ்ட்பின் திட்டம் ரூ.55 கோடி செலவில் மாநகரில் 200 முக்கிய சாலைகளில் 500 அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்துவதுடன் அவைகளை 60 மாதங்கள் வரை பராமரிக்கும் பொறுப்பை குத்தகைக்கு வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

என்.ஆர்.ரமேஷ் கொடுத்துள்ள புகார் பட்டியலில் முதல் கட்டமாக மூன்று புகார்கள் மீதான உண்மை நிலையை விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை கொடுக்கும்படி தலைமை செயலாளருக்கு முதல்வர் நேற்று உத்தரவிட்டார். மேலும் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும், அதை தொடர்ந்து எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோதும் மாநகராட்சி மூலம் செயல்படுத்திய 12 திட்டங்களில் நடந்துள்ள பெரிய முறைகேடுகளின் பட்டியலை என்.ஆர்.ரமேஷ் முதல்வரிடம் கொடுத்துள்ளார். அதில் முதல் கட்டமாக 3 புகார்கள் மீதான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மற்ற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார் என்று தெரியவருகிறது.
இதுகுறித்து என்.ஆர்.ரமேஷிடம் கேட்டபோது, மாநகராட்சியில் கடந்த நான்காண்டுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது. சாலை, கழிவுநீர், மழை நீர் கால்வாய், டெண்டர் சூர், குடிநீர் திட்டம், வன மேம்பாடு, ஆழ்துளை கிணறுகள் தோண்ட அனுமதி வழங்கியது உள்பட பல திட்டங்கள் செயல்படுத்த ஒதுக்கீடு செய்த நிதியில் முறைகேடுகள் குவிந்துள்ளது.
நான் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுத்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முதல்வரிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தேன். எனது நியாயமான கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Tags : Investigation ,Bengaluru Municipal Corporation Plans Bengaluru Corporation , Investigation ,irregularities in Bengaluru Corporation
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்