×

இந்தி மொழிக்கு எடியூரப்பா எதிர்ப்பு கன்னடமே பிரதானம் என அறிவிப்பு

பெங்களூரு: இந்தி மொழிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கன்னடமே எங்களுக்கு பிரதான மொழி என்று அவர் கூறியுள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும், நாட்டிற்கு என ஒரு பொதுமொழி அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.

இந்தியை பிரதானப்படுத்தி மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது பாஜ.வைச் சேர்ந்த கர்நாடக முதல்வரும் அதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘கர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது, எல்லா அதிகாரப்பூர்வ மொழியும் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் எந்த சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம். கன்னட மொழி, கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

ராகுலும் எதிர்ப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுலும் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது’’ என கூறியுள்ளார்.

Tags : anti-Yeddyurappa ,Kannada , Hindi language, Yeddyurappa
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...