×

காங். கூட்டணியில் தொகுதி உடன்பாடு தலா 125 தொகுதிகளில் போட்டி: சரத் பவார் தகவல்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு 38 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று தெரிவித்தார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே கடந்த ஒரு மாதகாலமாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளும் சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை நேற்று சரத் பவார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் கூறியதாவது; காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 38 தொகுதிகளை ஒதுக்கப்படும். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய முகங்களை வேட்பாளர்களாக நிறுத்த தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். சில தொகுதிகளை இருகட்சிகளும் பரிமாறிக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

அந்த தேர்தலில் காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் அதே கட்சிகள் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே, சமாஜ்வாடி, ராஜூ ஷெட்டியின் சுவாபிமாண் சேத்கரி சங்கட்டனா, ஹிதேந்திர தாக்கூரின் பகுஜன் விகாஸ் அகாடி போன்ற சிறிய கட்சிகளுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவையும் கூட்டணிக்கு கொண்டு வர தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தாலும் அதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அவரவர் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பது என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது.

Tags : Sharad Pawar ,constituencies , Congress Alliance, Volume Agreement, Sharad Pawar
× RELATED சரத் பவார் படத்தை அஜித் பவார் அணி பயன்படுத்த தடை..!!