×

மைசூர்பாகை வச்சு செஞ்ச ‘டிவீட்’: கர்நாடகாவில் பொங்கி அடங்கிய ‘வாட்டாள்’

பெங்களூரு: புகழ்பெற்ற மைசூர் பாக் இனிப்பு தமிழகத்திற்கு சொந்தமானது என்ற சமூக வலைத்தள  புரளியை உண்மை என நம்பி கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக  வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் ஆனந்த ரங்கநாதன் என்பவர் மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமனுக்கு மைசூர் பாக் இனிப்பு வழங்குவதைப்போல ஒரு  புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் தமிழகத்தில் மைசூர் பாக்கிற்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கு நன்றி  என்பது போன்ற ஒரு செய்தியை பதிவிட்டு இருந்தார். இந்த செய்தி  வைரலாக பரவி வந்த நிலையில், கன்னட அமைப்பினர் இந்த விஷயத்திற்கு கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மாநிலத்தில் சில எலெக்ட்ரானிக்  மீடியாக்களிலும் செய்தி வெளியிட்டதுடன் இது தொடர்பாக வாத-விவாதங்கள்  தொடங்கினர்.

காவிரி நதிநீர் பங்கீடு, எல்லை பிரச்னையில்  கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழகம் எடுத்து வரும் நிலையில், கடந்த  நூறாண்டுக்கு முன் குரு ஸ்வீட் மார்க் நிறுவனத்தினரால் பிரத்யேகமாக  தயாரிக்கப்பட்ட இனிப்பை மைசூரு மன்னராக இருந்த நால்வடி கிருஷ்ணராஜ  உடையாருக்கு வழங்கியதாகவும், அவர் சாப்பிட்டு மிகவும் சுவையாக உள்ளது.  இதற்கு என்ன பெயர் என்று கேட்டபோது, எதிர்பாராமல் மைசூரு பாக் என்று  தயாரிப்பாளர்கள் கூறியதால், அப்பெயர் நிலைத்துவிட்டது. இப்படி வரலாற்று  சிறப்புமிக்க இனிப்பை தமிழகம் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம் என்று  கேள்வி எழுப்பியதுடன், கர்நாடக சட்டபேரவையில் இருந்து மாநிலங்களவை  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  துரோகம் செய்து விட்டதாகவும் விமர்சன கணைகள் தொடுத்தனர்.

இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைந்த கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள்  நாகராஜ், மைசூர்பாக் தங்களுடையது என கொண்டாடும் உரிமை தமிழகத்திற்கு இல்லை  என்றும், தமிழ்நாட்டில் நல்ல கடலை மாவு மற்றும் நெய் கிடையாது என்றும்  கூறினார். அதுமட்டுமல்லாமல் மைசூர்பாகை தமிழகம் சொந்தம் கொண்டாட  வேண்டாம், கர்நாடகாவில் இருந்து பேருந்து மூலமாகவோ ரயில் மூலமாகவோ விமானம்  மூலமாகவோ தமிழகத்திற்கு கொண்டு செல்ல முடியாத வகையில் எல்லையில் நின்று  தடுப்போம் என பேசினார். மாலையில் இது வதந்தி என்று தெரிந்தபின்,  தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மீடியாக்கள் நிறுத்தி விட்டன.




Tags : Mysore Bagai Sencha ,Tweed ,Karnataka ,Mysore , Mysore, Karnataka, Water
× RELATED கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்