×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு திருத்தம் செய்ய அக்.15 வரை காலஅவகாசம் : மாநகராட்சி ஆணையர் தகவல்

பெங்களூரு : .பெங்களூரு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான அனில்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்வது, பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட தவறுகள் இருக்கும் பட்சத்தில் திருத்தி கொள்வது, முகவரி மாற்றம் செய்வது உள்பட பல பணிகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கி நடத்துவது வழக்கம். இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் 22 மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடங்காமல் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 15ம் தேதி வரை காலவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், பெயர் அல்லது முகவரி திருத்தம் செய்வோர், அதற்கென்று தனி தனியாக இருக்கும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை மாநகராட்சி சேவை மையம், பெங்களூரு ஒன் மையம், அடல் ஜனஸ்னேஹி மையம், பாபுஜி சேவை மையம், வாக்குச்சாவடி அதிகாரிகள் அலுவலகம், வார்டு அலுவலங்களில் செலுத்தலாம். மேலும் ஹோட்டல் ஹெல்ப்லைன் அல்லது என்விஎச்சி போர்ட்டரிலும் லாகின் செய்யலாம்.

இது தொடர்பாக விவரம் வேண்டுவோர் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம். அக்டோபர் 15ம் தேதிக்கு பின் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் வீடு வீடாக சென்று பரிசோதிப்பார்கள்.பெங்களூரு மாநகரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் பணியில் கூடுதல் கலெக்டர்கள் 4 பேர் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் 7 சட்டபேரவை தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநகரில் மொத்தம் 28 பேரவை தொகுதிகளில் 8 ஆயிரத்து 514 வாக்குச்சாவடிகள் உள்ளது.ஒவ்வொரு சட்ட பேரவை தொகுதிக்கும் தனியாக தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இம்முறை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைப்பது மற்றும் ஜிபிஎஸ் மூலம் வீட்டு எண்கள் சரி பார்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் எந்த முறைகேடும் நடக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்றார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான பணி பெங்களூருவில் மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் 224 சட்டப்பேரவை தொகுதியிலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Deadline, revision of voter list name,Oct. 15
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...