×

போக்குவரத்து விதி மீறலுக்கு வசூலிக்கப்படும் அபராத தொகை ஓரிருநாளில் குறைக்கப்படும்? : துணை முதல்வர் லட்சுமண் சவதி தகவல்

பெங்களூரு: போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத்தொகையை குறைப்பதற்கான நடவடிக்கை ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என துணை முதல்வர் லட்சுமண்சவதி கூறினார். பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் விபத்துக்களில் சி்க்குவோர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். இதனால், விபத்துக்களில் சிக்குவோரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்து, போக்குவரத்து விதிகளை மீறுவோரிடமிருந்து அதிக அளவில் அபராதம் வசூலிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தும் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அந்தந்த மாநிலங்கள் தங்களின் வசதிகளுக்கு ஏற்ப அபராத தொகையை குறைத்துக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மாநில அரசுகளுக்கு ஆலோசனை கூறினார். அதன்படி சில மாநிலங்கள் மத்திய அரசு அறிவித்து இருந்த அபராத கட்டணத்தை குறைத்துள்ளன. அதேபோல கர்நாடகாவிலும் போக்குவரத்து விதிகளை மீறுவோரிடமிருந்து வசூலிக்கப்படும் அபராத கட்டணத்தொகையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா ஏற்கனவே போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிகாரிகளும் அபராத தொகையை எவ்வளவு குறைக்கலாம் என்பது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் விவரங்களை கூறியுள்ளனர். அதன்படி அபராத தொகையை எவ்வளவு குறைப்பது, எப்போது முதல் புதிய அபராத விவரங்களை அமலுக்கு கொண்டு வருவது என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.  


Tags : Deputy Chief Minister , Fine imposed , traffic violations, reduced in a day, Deputy Chief Minister Lakshman Sawadi Information
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு