×

விதிமீறல் பேனர் எதிரொலி ஐகோர்ட்டில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக உறுதி

சென்னை: விதியை மீறி கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க கூடாது என்று தொண்டர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்கள் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவிற்கு செப்டம்பர் 12ம் தேதி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் ஸ்கூட்டரில் சென்ற சுப நிலைதடுமாறி விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறியதில்  சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.மறுநாளே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் வக்கீல்கள் லக்ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் வைத்த முறையீட்டை விசாரித்தனர். அதனுடன் விதிமீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்து பேனர் வைக்க கூடாது என கட்சி தலைவர்கள் அறிவித்தால் என்ன என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்க கூடாது என அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களின் இந்த அறிவிப்பை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய விரும்பினால் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர் விதிமீறல் பேனரை தடுக்காத அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், சுப குடும்பத்துக்கு ₹5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை செப்டம்பர் 25ம்  தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2017 ஜனவரி 29ம் தேதி திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அல்லது பிற நிகழ்சிகளுக்கு சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள்  வைக்க கூடாது என எச்சரித்துள்ளார்.அதன்பின்னர், 2018 ஜூன் 19ல் திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்வமிகுதியால் சிலர் பேனர் வைப்பது தொடர்கிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் சுப மரணத்திற்கு பிறகு செப்டம்பர் 13ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 2017ம் ஆண்டு கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வந்த முதல்வர், அமைச்சர்களை வரவேற்று வைக்கப்பட்ட வளைவு விழுந்ததில் லாரியில் அடிபட்டு பொறியாளர் ரகு இறந்தபோது, விதிமீறல் பேனர்களை தடுக்க  கோரி திமுக எம்.எல்.ஏ. கார்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திமுக கடை பிடித்து வருகிறது.பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு ஆகியவற்றை கட்டுப்படுத்த திமுக எடுக்கும் நடவடிக்கைகளை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை  மதித்து திமுக செயல்படும். இவ்வாறு பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் ரிச்சர்ட்சன் வில்சன் தாக்கல் செய்து நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுவும் வழக்கில் சேர்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

Tags : DMK ,Icort Filing , violation banner, DM, Icort,court order
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...