×

அமமுக தலைமையை விமர்சனம் செய்த விவகாரம் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கம்: டிடிவி.தினகரன் அதிரடி

சென்னை: அமமுக புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டார். இதில், கட்சி தலைமையை விமர்சனம் செய்ததையடுத்து புதிய பட்டியலில் புகழேந்திக்கு இடம் அளிக்கப்படவில்லை. அமமுக தலைமை  மேல் உள்ள அதிருப்தி காரணமாக ஏராளமான முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்தவாறு உள்ளனர். இதனால், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய ஆட்களை தினகரன் நியமித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் நம்பிக்கைக்குரிய நபராக உள்ள புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சி தலைமைக்கு  எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த ரகசிய சந்திப்பு குறித்த வீடியோ வெளியாகி அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பல்வேறு முக்கிய நிர்வாகிகளை தொடர்ந்து புகழேந்தியும் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், நேற்று அமமுக புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, அமமுக துணைப்பொது செயலாளர்கள் பி.பழனியப்பன், எம்.ரெங்கசாமி, பொருளாளர் பி.வெற்றிவேல், முன்னாள் அமைச்சர்  ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.மாரியப்பன் கென்னடி, கே.டேவிட் அண்ணாதுரை, தாம்பரம் நாராயணன், இளந்தமிழ் ஆர்வலன், எம்.ஆர்.ஜெமீலா, அதிவீரராம பாண்டியன்,  வீரவெற்றிபாண்டியன், வி.காசிநாதபாரதி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகிய 14 பேர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, டிடிவி.தினகரனுக்கும் புகழேந்திக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் முற்றியுள்ள நிலையில் கட்சியின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்த புகழேந்திக்கு மீண்டும் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : removal ,Dissanayake ,Spokesperson UPA , Criticism , UPA leadership, DDV Dinakaran ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...