×

5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: கல்வியாளர்கள் கண்டனம்

சென்னை: பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேர்வு வைத்திருப்பது குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாக இருக்கிறது என்று பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த வாரம் வெளியானது. இதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனங்களை தெரிவித்தும் வருகின்றனர். ஆனால் அரசு மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, கல்வியாளர்கள் சார்பில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
இது  குறித்து பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் முன்னாள் துணை வேந்தருமான வசந்திதேவி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகளில் 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  சமீபத்தில் பின்லாந்து சென்று வந்த கல்வி அமைச்சர் அந்நாட்டின் சிறப்பு அம்சங்களை தமிழக பள்ளிகளில் கொண்டுவரப்படும் என்றார். பின்லாந்து, வேறு எந்த வெளிநாட்டிலும் வளரும் நாட்டிலும் 5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இருக்கிறதா என்பதை அமைச்சர் சுட்டிக்காட்ட  முடியுமா. தேர்வுகளுக்கு பதிலாக ஆசிரியர்கள் தான் மாணவர்களை திறமையானவர்களாக மாற்ற வேண்டும். பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை அளிக்கும். குழந்தைகள் மேல் ஏவப்படும் வன்முறை.

மேற்கண்ட வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே வகுப்பில் முதல் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி  வைக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அடுத்த ஆண்டுகளில் நிறுத்தி வைப்பார்கள் என்பது தெரிகிறது. தோல்வி அடைந்ததாக கருதப்படும் மாணவர்கள் அவமானத்தால் பள்ளியில் இருந்து நின்று விடுவார்கள். இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும். தோல்விக்கு அந்த மாணவன் மட்டுமே பொறுப்பாக முடியாது.  5,8 வகுப்புகளுக்கான தேர்வில் தோல்வி அடையப் போவது யார் என்றால் நிச்சயம் மேல் வர்க்க சாதியினரோ, கல்வி கற்ற பெற்றோரின் பிள்ளைகளோ அல்ல. விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகள் தான் 5ம் வகுப்பில் இருந்து வெளியில் வருவார்கள். பின்னர் அவர்கள் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவார்கள். அதனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பை பெற்றோர், கல்வியாளர்கள், சமூக அமைப்புகள் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

Tags : Violence Against Children: Examination of Educators , class 5, 8, children, academics
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...