×

கோவை மாநகராட்சி சார்பாக ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றம்: தனிக்குழு நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சி சார்பாக ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஸ்கூட்டியில் சுபஸ்ரீ(23) என்ற  இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த  சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பல தரப்பினரும் இதற்கு தங்களது கண்டனத்தை பதிவு  செய்து வருகின்றனர்.

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம்  ரூபாய் வழங்க உத்தரவிட்டது. மேலும், பேனர் வைத்தவர்களும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவு  முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின்  அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம், என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பாக விதிமீறல் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்ற தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் மூலம்  இன்று செப்டம்பர் 16-ம் தேதி ஒரே நாளில் 1,609 பேனர்கள் அகற்றப்பட்டதாக கோவை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார். மேலும், கடந்த 2  மாதங்களில் 5,306 பேனர்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Tags : Coimbatore Corporation , Coimbatore Corporation, Banners, Private Committee, Action
× RELATED கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சல் துப்பினால் ரூ.500 அபராதம்