×

பொதுமக்களின் உயிரிழப்புக்கு பிறகு தான் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விழிப்பு வருகிறது: உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் இறந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டது. இது முற்றிலும் உண்மை என்பதற்கு பல நிகழ்வுகள் உதாரணமாக உள்ளன. தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு மரணத்திற்கு பிறகு தான் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் விழித்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மரணங்களும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பின்வருமாறு:

1998-ல் சரிகாஷா ஈவ் டீசிங்கிற்கு எதிரான நடவடிக்கை தீவிரமானது

1998-ம் ஆண்டு சென்னையில் கல்லூரி மாணவி சரிகாஷா கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த சரிகாஷாவை ஆட்டோவில் சென்ற நபர் ஒருவர் கேலி செய்தார். நிலைகுலைந்து கீழே விழுந்த சரிகாஷா தலையில் அடிபட்டு இறந்து விட்டார். சரிகாஷா மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் தமிழ்நாட்டில் பெண்களை கேலி செய்பவர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையானது.

2000-ம்  ஆண்டில் 3 மாணவிகள் எரிப்பு: பேருந்து எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாய்ந்தது

2000-ம்  ஆண்டில் தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. கோகிலவாணி, கேமலதா, காயத்திரி, ஆகிய 3 மாணவவிகள் இறந்ததால் நாடே கொந்தளித்தது. பொது சொத்துக்களை சேதப்படுத்தி தீங்கு செய்கிறவர்களுக்கு நீதிமன்றமும், அரசும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தின. அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் பேருந்துகளை தீ வைத்து எரிப்பது குறைந்தது.

2001-ல் ஏர்வாடி விபத்து: தனியார் மனநல காப்பகத்துக்கு கட்டுப்பாடு

2001-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மன நோயாளிகளுக்கான தனியார் காப்பகம் தீப்பிடித்து எரிந்தது. சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருந்த மனநோயாளிகள் தப்பித்து ஓட முடியவில்லை. இந்த தீ விபத்தில் 28 பேர் தீயில் கருகி இறந்தனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் தனியார் மனநல காப்பகங்கள் நடத்துவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன.

2004-ல் பள்ளி தீ விபத்து: பள்ளிகள் அனுமதி பெறுவதற்கான விதிகள் கடுமையானது

2004-ம் ஆண்டு கும்பகோணத்தில் கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. வெளியேற வழி கிடைக்காமலும், புகையில் மூச்சு திணறியும், தீயில் கருகியும், 94 குழந்தைகள் இறந்தனர். தமிழ்நாட்டில் மிக அதிகம் பேரை பலி கொண்ட தீ விபத்து இதுவாகும். பள்ளி கட்டிடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிகள் அதன் பிறகு உருவாக்கப்பட்டது. பள்ளிகள் அனுமதி பெறுவதற்கான விதிகளும், கடுமையானது.

2009-ல் படகு விபத்து: உயிர்காக்கும் உடை அணிவது கட்டாயமாக்கப்பட்டது

2009-ல் தேக்கடி பெரியார் நீர் தேக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீச்சல் தெரியாததாலும், உயிர் காக்கும் உடைகளை அணியாததாலும், 45 பேர் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். இதன்பிறகு தான் சுற்றுலா மையங்களில் நடைபெறும் படகு சவாரிகளின் போது உயிர் காக்கும் உடை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.

2012-ல் ஸ்ருதி மரணம்: பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்வது அமலானது

2012-ம் ஆண்டு சென்னையில் தாம்பரம் அடுத்த சேலையூரில் தனியார் பள்ளி பேருந்தில் ஓட்டை; அதில் பயணித்த 6 வயது சிறுமி ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனியார் பள்ளிகளுக்கு கண்டனம் வலுத்தது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும் முறை அமலுக்கு வந்தது.

2014-ல் சசிபெருமாள்: மதுக்கடை எதிர்ப்பு வலுவடைந்தது

2014-ல் சேலத்தை சேர்ந்த மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் குமரி மாவட்டத்தில் மதுக்கடை ஒன்றை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய சசிபெருமாளின் உயிர் அங்கேயே பிரிந்தது. சசிபெருமாள் மரணத்தால் மதுக்கடை ஒழிப்பு போராட்டங்கள் தீவிரமடைந்தன. பின்னர் நெடுஞ்சாலைகள் ஓரம் இருந்த கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டன.

2016-ஸ்வாதி: ரயில் நிலையங்களில் கட்டாயக் கேமரா அமலானது

2016-ல் சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற மென்பொருள் பொறியாளர் இளைஞர் ஒருவரால் வெட்டிக்கொள்ளப்பட்டார். பின்னர் அந்த இளைஞர் தப்பி ஓடும் காட்சிகள் மட்டும் சிசிடிவி கேமராக்களால் கிடைத்தன. ஆனால் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு உரிய காட்சி கிடைக்கவில்லை. இதன் பிறகு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினால் தான் சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமானது.

2017-ல் அனிதா: நீட்டுக்கு எதிராக தமிழக அரசு திட்டம்

2017-ம் ஆண்டு மருத்துவ கனவு தகர்ந்ததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பு தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் எடுத்தும் நீட்டில் வெற்றி பெற முடியாததால் அவரால் மருத்துவராக முடியவில்லை. இதனையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்தது. தமிழக அரசு நீட் விலக்கு சட்டம் இயற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து அந்த சட்டம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

2018-ல் குரங்கணி தீ விபத்து: மலையேறும் பயிற்சிக்கான விதி கடுமையானது

2018-ல் மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்களை காட்டுத் தீ சூழ்ந்தது. இதிலிருந்து யாராலும் தப்பித்து வர முடியவில்லை. ஆண்கள், பெண்கள் என 33 பேர் இறந்தனர். அதற்கு பிறகு தான் மலையேற்ற பயிற்சிக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன.

2018-ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது

2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் அலையால் நிலத்தடி நீர் கேட்டு போகிறது என்றும், சுற்றுசூழல் மாசுபடுகிறது என்றும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பல ஆயிரம் பேர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழங்கினர். போராட்டத்தை அமைதியாக கட்டுப்படுத்த தவறிய போலீசார் கண்முடி தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் இறந்தனர். இதனையடுத்து அரசு பணிந்தது; ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

2019-ல் சுபஸ்ரீ: பேனர் வைத்தால் ஓராண்டு சிறை

2019-ல் சென்னை பள்ளிக்கருணையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுபஸ்ரீ அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் அறுந்து விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து லாரி மோதி உயிரிழந்தார். இதனையடுத்து சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் கண்டன அம்புகளை தொடுத்தது. இனி பேனர் வைக்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து அறிவித்தனர். பேனர் வைத்தால் ஓராண்டு சிறை என்று மாநகராட்சி அறிவித்தது.


Tags : death ,civilians ,government ,deaths , Public casualties, vigilance, government action
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை