×

வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், வனத்தில் உள்ள தாவரங்கள் செழித்து வளர்ந்ததுடன் பச்சை பசேல் என உள்ளது. இருப்பினும், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நீர்நிலை மற்றும் உணவுத்தேடி இடம்பெயர்வது தொடர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நவமலை வனப்பகுதியிலிருந்து, யானைகள் கூட்டமாக ஆழியார் அணையை நோக்கி வருவதை, வனத்துறையினரால் காண முடிந்தது. தினமும் மாலை நேரத்தில், 3க்கும் மேற்பட்ட யானைகள் வரிசைக்கட்டி, ஆழியார் ரோட்டில் ஒய்யாரமாக நடந்து ரோட்டை கடந்து செல்கிறது. சிலநேரங்களில், யானைகள் ரோட்டோரம் உள்ள மரக்கிளைகளை பறித்து உண்டு, சில மணிநேரம் அங்கேயே உலா வருகின்றன. இதில் நேற்று பகல் நேரத்தில் அப்பகுதியில் உலா வந்த மூன்று யானைகளில் ஒரு யானை, வெகுநேரம் ஆழியார் ரோட்டில் உலா வந்து இரை தேடியது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், யானையை பார்த்ததும் பின்னோக்கி நகர்ந்தனர். மேலும், வாகனம் அருகே வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு பீதியடைந்தனர். குரங்கு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும், யானையை கண்டதும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த, வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வாகன போக்குவரத்து மிகுந்த ரோட்டோரம் நின்று மேய்ந்துகொண்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் அந்த யானை அங்கேயே நின்று கொண்டது. பின் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டது. அதன்பிறகே வாகனங்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் ஆர்வகோளாறில் ஆழியார் ரோட்டில் ஆங்காங்கே நின்று செல்வதை தடுக்கவும், வாகனத்திலிருந்து இறங்கி விலங்குகளை தொந்தரவு செய்துவிட கூடாது என்பதற்காக, வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Aliyar Road ,Pollachi , Pollachi, wilderness
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு