×

சட்டவிரோதமான முறையில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம்..: உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: சட்டவிரோதமான முறையில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என்று, உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஸ்கூட்டியில் சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பல தரப்பினரும் இதற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். விபத்துக்கு காரணமான பேனரை தயார் செய்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூர் வினாயகபுரத்தில் உள்ள சண்முகா டிஜிட்டல் பேனர் மற்றும் ஸ்டிக்கர் அச்சகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது. சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. மேலும், பேனர் வைத்தவர்களும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம், என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என்று, திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், அதில், கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள்,கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத பேனர் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை திமுக தவறாமல் பின்பற்றும்.

2018ம் ஆண்டு ஜூன் மாதம் திமுக அளித்த உத்தரவாதமும் பின்பற்றப்படும். சட்டவிரோதமான முறையில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைக்க மாட்டோம், என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, நீதிமன்ற உத்தரவை திமுக முழுமையாக அமல்படுத்தி வருவதாகவும், 2017 ஜனவரியிலேயே அப்போது கட்சியின் செயல்தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், பேனர்கள் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திமுகவின் நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் தொண்டர்கள் வைக்கக் கூடாது எனவும், மீறி வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : DMK ,High Court , Illegal Banner, DMK, High Court, Affidavit, Subasree
× RELATED அதிக விலை கொடுத்துவிழிப்புணர்வு...