வறண்டு கிடக்கும் அமராவதி ஆறு: தண்ணீர் திறக்க கோரிக்கை

உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணை நிரம்பவில்லை. 90 அடி உயரம் கொண்ட அணையில், 70 அடியை தாண்டிய நிலையில் நீர்வரத்து குறைந்து விட்டது.சில வாரங்களுக்கு முன், கரூர், தாராபுரம் பகுதி குடிநீர் தேவைக்காக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கடந்த மாத இறுதியில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர துவங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 84அடியாக (நேற்றைய நிலவரப்படி) உள்ளது. அணைக்கு 341 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. அணை தனது முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 6 அடியே உள்ளது. இதன் காரணமாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அமராவதி ஆறு வறண்டு கிடக்கிறது.

குறிப்பாக மடத்துக்குளம் பகுதியில் வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. உறிஞ்சுகுழிகளில் மட்டும் சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. சாமிநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அமராவதி ஆற்றில்தான் குளிக்க, துணி துவைக்க வருவார்கள். இப்போது வறண்டு கிடப்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Amravati River Dry , Amaravati River, water
× RELATED அமராவதி அணையில் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு