×

மானூர் ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் இந்திராநகர் மக்கள்

தாழையூத்து: மானூர் ஊராட்சி குப்பணாபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மானூர் ஊராட்சி ஒன்றியம், குப்பணாபுரம் கிராமத்தில் இந்திராநகர் குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கிராமத்திலிருந்து 500மீ தொலைவில் சாலை உள்ளது. தெருக்களில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பேருந்திலிருந்து இறங்கி வரும் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். இப்பகுதியினர் அனைவரும் கூலி தொழிலாளிகள். அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் இப்பகுதியை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், பல பணிகளை செய்யாமலே பணிகள் முடிந்ததாக கணக்கு காண்பிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பகுதியில் தரைமட்ட தொட்டிக்கான ஆழ்துளை கிணறு மூடப்பட்டு, அதிலேயே மழைநீர் சேகரிப்பு திட்டம் எனக் கூறி நீர் தொட்டி மற்றும் மோட்டாரை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் குறைந்த அளவில் கிடைக்கும் குடிநீரை பயன்படுத்துவதாகவும், கால்நடைகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக நீண்ட தூரம் தண்ணீரை தேடி அலைகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஓடையின் வழியாக பள்ளமடை குளத்திற்கு மழை நீர் சென்றதாகவும், தற்போது அந்த ஓடை பராமரிக்கப்படாததால் மழைநீர் குடியிருப்பிற்குள் புகுந்துவிடுகிறது. இது குறித்து பல முறை பஞ். அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மானூர் ஊராட்சி, குப்பணாபுரம் இந்திரா குடியிருப்புக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : panchayat ,Manoor ,facilities , Talaiyuttu, basic facility
× RELATED திருக்கழுக்குன்றம் பேரூராட்சி ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா