×

சேலம் கரிய பெருமாள் கோயில் கரட்டில் மண் சரிவால் ஒரு டன் எடையுள்ள பாறாங்கல் சரிந்து விழுந்து வீடு சேதம்

சேலம்: சேலம் கரியபெருமாள் கரட்டில் 1 டன் எடை கொண்ட பாறாங்கல் சரிந்து விழுந்தது. இந்த பாறை, வீடு மீது மோதி நின்றதால் சுவர் இடிந்து தாய், மகள் காயமடைந்தனர். சேலம் நெத்திமேட்டில் உள்ள எஸ்பி அலுவலகம் பின்புறத்தில் கரிய பெருமாள் கோயில் கரடு உள்ளது. இந்த கரட்டை சுற்றி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சேலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கரிய பெருமாள் கோயில் கரட்டில் வடக்கு புறத்தில் நேற்று காலை 9 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு டன் அளவில் பெரிய பாறாங்கல் கரட்டில் இருந்து உருண்டு வந்துள்ளது. அப்போது, அங்கு கரட்டையொட்டி கட்டப்பட்டுள்ள 3 மாடி கொண்ட வீட்டின் சுவர் மீது பாறாங்கல் மோதி நின்றது. அந்த வீட்டில் குடியிருந்து வரும் பூங்கொடி(45), அவரது மகள் மைதிலி(22), பேத்தி அர்ச்சனா(5) ஆகியோர் இருந்தனர்.

பாறாங்கல் மோதியதில் சுவரில் விரிசல் ஏற்பட்டு செங்கல் சரிந்தது. அப்போது வீட்டில் இருந்த மைதிலி, அர்ச்சனாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டதும், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார், வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாறாங்கல் மோதிய வீட்டு சுவரில் சிறிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது. அந்த பாறாங்கல்ைல அகற்றும் பணியில் வருவாய்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தை யொட்டி அந்த பகுதியில் உள்ள 3வீடுகளில் குடியிருக்கும் 10க்கும் மேற்பட்டோரை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கரிய பெருமாள் கோயில் கரட்டில் இருந்து பெரிய பாறாங்கல் உருண்டு வந்தது. இந்த பாறாங்கல் குடியிருக்கும் வீட்டு சுவரில் மோதியபடி நின்றது. அப்போது வீட்டில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது போல் கடந்த காலங்களில் 4 முறை பாறாங்கல் உருண்டு வந்து விழுந்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்த மழையால் தான் கரட்டில் மண் சரிவு ஏற்பட்டு பாறாங்கல் உருண்டு வந்துள்ளது. இந்த பாறாங்கல்லை உடனே அகற்ற நடவடிக்ைகை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Salem Kariyam Perumal Temple Dirt Fall , Salem, home damage
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை