×

ஒன்றரை மாதத்திற்கு பின் டாப்சிலிப்பில் யானை சவாரி துவக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் ஒன்றரை மாதத்திற்கு பின் மீண்டும் யானை சவாரி துவங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப், குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதில், டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி, வனத்தின் அழகு மற்றும் வன விலங்குகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். டாப்சிலிப் வனத்தை சுற்றிபார்க்க, வனத்துறை மூலம் கும்கி யானைகளை கொண்டு சவாரியும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் யானை சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானை சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில், பெய்ய துவங்கிய தென்மேற்கு பருவமழையால், அந்நேரத்தில் டாப்சிலிப்பில் யானை சவாரி தடைப்பட்டது. இடையிடையே மழை குறைந்தாலும், வனத்தில் ஈரப்பதம் தொடர்ந்திருந்ததால் யானை சவாரி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின் இந்த மாதம் துவக்கத்திலிருந்து ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்ததால், யானை சவாரி தொடர்ந்து தடைப்பட்டது. டாப்சிலிப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் யானை சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வனத்தில் மழை குறைவானதையடுத்து, சுற்றுலா பயணிகள் வசதிக்காக டாப்சிலிப்பில் யானை சவாரி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஒன்றரை மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம், டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி துவங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால், வெகுநாட்களுக்கு பிறகு டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய, கோழிக்கமுத்தியிலிருந்து இரண்டு கும்கி யானைகள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர், குடும்பத்துடன் யானை சவாரி செய்து மகிழ்ந்தனர். ஒன்றரை மாதத்திற்குபிறகு மீண்டும் யானை சவாரி துவங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் நாட்களில் மழைபொழிவு இல்லாமல் இருந்தால், டாப்சிலிப்பில் தொடர்ந்து யானை சவாரி இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Topslip , Pollachi, Elephant Riding
× RELATED மீண்டும் தொழில் தொடங்கவா... இருக்கும்...