×

ஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து செப்.30-க்குள் பதிலளிக்க வேண்டும்: வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என வைகோ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 5ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதனால் பிரச்னை எழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் 3 முறை முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா, டெலிபோன் வசதி இல்லாத இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. அதேசமயம் ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை என்றும், வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சம் தெரிவித்தது. இதற்கிடையில், மதிமுக சார்பில் செப்.15ல் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். எனவே, மாநாட்டின் அழைப்பிதழில் ஃபரூக் அப்துல்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும், எனக் கோரி எம்.பி. ஆன வைகோ மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காஷ்மீரில் ஜனநாயகம் என்பதே இல்லாத நிலை உள்ளதாக குற்றசாட்டிய வைகோ தரப்பு வழக்கறிஞர், ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி செப்டம்பர் 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஃபருக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு வைகோ தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court ,government ,Central ,Vaiko ,Farooq Abdullah , Farooq Abdullah, Vaiko, Federal Government, Supreme Court, Kashmir
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...