×

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் விளம்பர பலகை சரிந்து விழுந்து ஒப்பந்த தொழிலாளி படுகாயம்: இளம்பெண் பலியான பரபரப்பு அடங்கும் முன் அடுத்த விபத்து

வேளச்சேரி: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்ததில், ஒப்பந்த தொழிலாளி படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பள்ளிக்கரைணை அருகே கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவினர் வைத்த பேனர் காற்றில் பறந்து, சாலையில் மொபட்டில் சென்ற குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்த கம்பியூட்டர்

இன்ஜினியர் சுபஸ்ரீ (23) மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய கீழே விழுந்த சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவின் பேரில் சாலையோரங்களில் உள்ள பேனர்களை அகற்றும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.

இந்நிலையில், பல்லாவரம் -  துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் விழுந்து விபத்து நடந்த பகுதியிலிருந்து 50 அடி தூரம் தள்ளி, தனியார் நிறுவனம் சார்பில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது.இந்த பேனரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, பேனர் கீழே சரிந்து விழுந்தது. இதில், பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெருங்குடியை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவரும் சரிந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : contract worker ,Pallavaram-Duraipakkam Radial Road ,accident , Pallavaram, Radial Road, Next, Accident
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...