×

தாம்பரம் அருகே பரபரப்பு தறிகெட்டு ஓடிய கார் மின் கம்பத்தில் மோதி விபத்து: போதை டிரைவர் கைது

தாம்பரம்: மேற்கு தாம்பரம் - தர்க்காஸ் பிரதான சாலையில், பழைய ஸ்டேட் பேங்க் காலனி அருகே நேற்று மதியம் சொகுசு கார் ஒன்று, தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் அந்த மின்கம்பம் உடைந்து, மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சம்பவம் குறித்து தாம்பரம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், காரில் இருந்த நபரை வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் அந்த நபர் போதையில் இருந்ததால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அந்த நபரை காரில் இருந்து இறக்கி சாலையோரம் உட்கார வைத்தனர்.ஆனால் நிதானமே இல்லாத அளவிற்கு அவர் மது அருந்தி இருந்ததால் அவர் சாலை ஓரமாவே போதையில் படுத்துவிட்டார்.பின்னர் சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர் முகத்தில் தண்ணீர் தெளித்து விசாரித்தனர். அதில், குரோம்பேட்டை, நியூ காலனி, ஏழுமலை நகர், 14வது குறுக்கு தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து மின்கம்பத்தில் மோதிய காரை பொதுமக்கள் உதவியுடன் மீட்ட போலீசார், நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்த கார்த்திகேயனை காவல் நிலையம் அழைத்து சென்று சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (40), தனது உறவினரை பார்க்க நேற்று முன்தினம் தி.நகர் சிவஞானம் தெரு, வி.என்.தெரு சந்திப்பில் உள்ள சாலையை கடந்தார்.அப்போது வேகமாக வந்த கார், பரமேஸ்வரன் மீது மோதியது. இதில் அவருக்கு கால் எலும்பு முறிந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் பொதுமக்கள் ஓடிவந்து விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினர். காரை ஓட்டிவந்த தி.நகர் வடக்கு போக் சாலையை சேர்ந்த பூபாலன் (25) என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பொதுமக்கள் பிடியில் இருந்த பூபாலனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். படுகாயமடைந்த பரமேஸ்வரனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பூபாலனிடம் விசாரணை நடத்துகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

வேகத்தடை அவசியம்
அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது குழந்தைகளை தினசரி பள்ளிக்கு அனுப்புவதற்காக பள்ளி பேருந்துக்காக விபத்து நடைபெற்ற மின்கம்பம் அருகில் தான் காத்திருப்போம். தற்போது, அந்த இடத்தில் தான் விபத்து நடைபெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாங்கள் குழந்தைகளுடன் நிற்கவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தினமும் அதிகப்படியான கனரக வாகனங்கள் இப்பகுதி வழியாக செல்வதால் தற்போது விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே வேகத்தடை மற்றும் தடுப்புகள் அமைத்து இனிமேல் விபத்துகள் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.


Tags : Drug driver ,collision ,Tambaram , Drug driver, car, electric car, collision, accident, arrest
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்