பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு கோவையில் வங்கதேச வாலிபர், 2 நண்பர்களிடம் விசாரணை

கோவை: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி சந்தேகத்தின்பேரில் கோவையில் வங்கதேச வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள  ஒரு செல்போன் கடையில் செல்போனை பழுது பார்க்க ஒருவர் கொடுத்திருந்தார். செல்போனை பழுது பார்க்கும் போது, அதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதற்கான ஆதாரம், மத ரீதியான கருத்து பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் குறித்த விவரங்களையும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள நபருடன் பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து செல்போன் கடை உரிமையாளர் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில், செல்போனை கொடுத்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாரூக் கவுசிர் (28) என்பதும், இடையர் வீதியில் தங்கி அதே பகுதியில் உள்ள நகைப்பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை பிடித்து தீவிரவாத அமைப்புகளுடன் உள்ளதொடர்பு குறித்து போலீசார் விசாரித்தனர். மேலும், தங்க நகை பட்டறையில் வேலை செய்யும் இவரது நண்பர்கள் 2 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சில அமைப்புகளுடன் பேஸ்புக் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பாரூக் கவுசிர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள முஜாகிதீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்த குழுவில் இவர் பாகிஸ்தான் நாட்டில் என்ன வகையான துப்பாக்கி எங்கே கிடைக்கும், எப்படி துப்பாக்கி வாங்குவது, அந்த துப்பாக்கியை இந்தியாவில் பெற முடியுமா என கேட்டு தகவல் பதிவு செய்துள்ளார். மேலும் பல்வேறு இயக்கங்கள் குறித்தும் அவர் பாகிஸ்தான் நாட்டின் தகவல்களை பதிவிட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது செல்போனையும், அவரின் நண்பர்கள் 2 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த 6 பேர் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ரெட் அலார்ட் விடப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத கும்பலுடன் வாட்ஸ் அப் குரூப்பில் தொடர்பில் வாலிபர்கள் இருப்பது குறித்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மே.வங்கத்தை சேர்ந்த பாரூக் கவுசிர் (28); நகைப்பட்டறையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

* நண்பர்கள் 2 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சில அமைப்புகளுடன் பேஸ்புக் தொடர்பு வைத்திருந்தனர்.

* பாரூக் கவுசிர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள முஜாகிதீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

* 2 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>