×

மயிலாடுதுறை அருகே துணிகர சம்பவம் பெண்ணை காரில் கடத்திய வடமாநில இளைஞர்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பட்டதாரி பெண்ணை வடமாநில இளைஞர்கள் காரில் கடத்தி சென்றனர். அவர் கதறியதால் நள்ளிரவில் இறக்கிவிட்டுள்ளனர். நாகை மாவட்டம் கிளியனுர் வேளூரை சேர்ந்த சிற்றரசு மகள் காயத்ரி (26). மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றார். 9.30 மணியளவில் வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தபோது, கார் ஒன்று இவரது வாகனத்தை வழிமறித்து நின்றது. காரிலிருந்து இறங்கிய 3 பேர் கொண்ட கும்பல் காயத்ரி மொபட்டை தள்ளிவிட்டு அவரை குண்டுகட்டாக காரில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றனர்.

அப்போது காயத்ரி கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் கார் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. சம்பவ இடத்தில் அவரது செல்போன், 2 செருப்புகள் கிடந்தது. இதைக்கண்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். காயத்ரியின் தந்தை சிற்றரசன் இதுபற்றி பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து தேடி வந்தனர். இதற்கிடையில் இரவு 12.30 மணியளவில் காயத்ரி, தனது தந்தைக்கு போன்செய்து தன்னை திருவாரூர் கங்களாஞ்சேரியில் மர்ம நபர்கள் இறக்கிவிட்டுள்ளனர். தன்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். உடனே பெரம்பூர் போலீசார், கங்களாஞ்சேரி சென்று காயத்ரியை அழைத்து வந்து அவரது வீட்டில் சேர்த்தனர். இதுதொடர்பாக நேற்று காலை காயத்ரியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, வீட்டின் அருகே ஸ்கூட்டியை வழிமறித்து காரிலிருந்து இறங்கிய 3 பேர், என்னை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று காரில் போட்டனர். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டிருந்தனர். எனது கம்மல், கொலுசு, மோதிரம் ஆகியவற்றை பிடுங்கிக்கொண்டனர். அவர்களில் இருவர் என்னை செல்போனில் போட்டோ எடுத்தனர். நான் எனக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறி கதறி அழுதேன். அதன்பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி இறக்கி விட்டு சென்றனர். சாலை ஓரத்தில் உள்ள பூக்கடைக்கு சென்று நிலைமையை கூறி செல்போனில் தந்தைக்கு தகவல் தெரிவித்தேன் என்றார். இதையடுத்து, கடத்தலில் வடமாநில இளைஞர்கள்தான் ஈடுபட்டு இருக்க கூடும் என்பதால் அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Tags : incident ,Mayiladuthurai , Mayiladuthurai, Venture incident, Woman, Car, Northland youth
× RELATED காஷ்மீரில் விநோத சம்பவம் எஜமானரை...