×

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு சீர்திருத்தம் என்ற பெயரில் மாணவர்கள் கல்வி கனவை சீரழித்திட வேண்டாம்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சீர்திருத்தம் என்ற பெயரில் மாணவர்களின் கல்வி கனவை சீரழித்திட வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அவசர ஆணை பிறப்பித்திருக்கும் அதிமுக அரசுக்கு, திமுக சார்பில், கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி கற்பதற்கு பள்ளிக்குள் நுழைவதிலிருந்து-தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை, விதவிதமான பொதுத்தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் இந்த உத்தரவு உருவாக்கும் என்ற அடிப்படை உண்மையை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் உணராதது கவலையளிக்கிறது.

அதிமுக அரசு அறிவித்துள்ள இந்தப் பொதுத் தேர்வு இனிமேல் ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை என்ற தாழ்நிலையை உருவாக்கி-ஆரம்பக் கல்வியையும் வணிகமயமாக்கி விடும் பேராபத்தைத் தோற்றுவித்து-ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியறிவையும் எட்டாக் கனியாக்கி விடும். கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில், மாணவர்களுக்கு பொதுத்  தேர்வு வைத்து, அதன் மூலம் அவர்களை ‘பெயில்’ ஆக்கி, அவர்கள் படிப்பதையே வெறுத்து அந்தக் கல்வியை விட்டு விலகி, குலக் கல்விக்குத் திருப்பி அனுப்பும் தந்திரத்தையும் மத்திய-மாநில அரசுகள் கூட்டாகக் கடைப்பிடிக்கின்றன.

இது அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். ஏற்கனவே 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொது தேர்வு இருக்கும் நிலையில், இப்போது 5, 8ம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு என்பது மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தையும் விரக்தியையும் உருவாக்கி, அவர்களின் உடல் நலத்தையும் கெடுத்து, சமூக நீதியின் வேரில் வெந்நீர் ஊற்றி, சமுதாய முன்னேற்றத்தை ஒரு நூறாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்லும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனும் எடுத்து, மாணவர்களின் எதிர்காலத்துடன் விபரீதமான விளையாட்டை நடத்தியிருக்கிறார்கள்.

மாநிலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு’ என்ற 13.9.2019 தேதியிட்ட அரசு ஆணையை அதிமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வி கனவில் சீர்கேடு உண்டாக்கிச் சிதறடிக்கும் எந்த முடிவினையும் பெற்றோர், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்காமல்-அவசரக் கோலத்தில் எடுத்து மாணவர் சமுதாயத்தின் மீது திணித்திட வேண்டாம்; அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிட வேண்டாம் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : 5th and 8th grade, general election, reform, students, dream of education, Government of Tamil Nadu,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...