×

விளம்பரங்களை வரைந்து அரசு சுவர்கள், பாலங்களின் அழகை சிதைப்போருக்கு கடும் தண்டனை: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: அரசு சுவர்கள், பாலங்களின் அழகை சிதைப்போருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், அவ்வளவு ஏன்? பள்ளிக்கூட சுவர்களைக் கூட விட்டு வைக்காமல் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் என அழகைக் கெடுக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். திரைத்துறை சார்ந்த விளம்பரங்களும், சுவரொட்டிகளும் அருவருக்கத்தக்கவையாகவும், பெண்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

அரசுக்கு சொந்தமான இடங்களும், மலைகள், பாலங்கள் போன்றவற்றையும் நமது இல்லத்தின் வரவேற்பறையாக கருதினால் அவற்றின் அழகைச் சிதைக்க மனம் வராது. அதையும் மீறி பொது இடங்களின் அழகைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 1959ம் ஆண்டின் தமிழ்நாடு திறந்தவெளிப் பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டத்தில் அரசு உரிய திருத்தங்களை செய்து, அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramadas , Ads, Government Walls, Bridges, Heavy Punishment, Government, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...