×

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக பள்ளிக் கல்வித்துறை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகும். இத்திட்டம் ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமையை தட்டிப் பறிப்பதாக அமைந்துவிடும்.  

உளவியல் மற்றும் சமூக உளவியல் தாக்கங்களினால் மாணவர் கல்வியின் மீது ஆர்வமிழப்பது, பள்ளியில் இருந்து விலகுவது அதிகரிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் அளவு பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாடு அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு என்று அறிவித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும். மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் இதில் கவனம் செலுத்தி பொது விசாரணை நடத்தி குழந்தை உரிமை காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர்: தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த 8ம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கும், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கும் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்குவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் திணறுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார் இது உண்மையல்ல.

உண்மையில் 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஆனால், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தினால் மாணவர்களின் கல்வித் தரம் அதிகரிக்கும் என்பது எந்த அடிப்படையும் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். பள்ளிக்கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. அதனால், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு மத்திய அரசு பொதுத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது என்பதாலேயே தமிழகமும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. கிராமப்புற மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும். அதற்கு மாறாக 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கும் திட்டத்தை அரசு தொடர வேண்டும்.


Tags : General Elections ,leaders ,Party , 5th, 8th, General Elections, Abandon, Party Leaders, Emphasis
× RELATED 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்...