×

முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விட திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினரை சேர்த்தது மாபெரும் வெற்றி: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: முதல் நாளிலேயே, எதிர்பார்த்ததை விட திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்த்தது மாபெரும் வெற்றி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக ஈர்க்க வேண்டும். செப்டம்பர் 14ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதிக்குள்ளான இரண்டு மாத கால இடைவெளிக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும்.

சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், திமுக இளைஞர் அணிக்கான உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் வட்ட வாரியாக வரிசையில் நின்ற இளைஞர்களைப் பார்க்கையில், இது உறுப்பினர் சேர்ப்பு முகாமா அல்லது வாக்குச்சாவடியா என்று எண்ணும் அளவுக்கு அவர்களுக்குள் ஓர் உற்சாகம், ஓர் ஒழுங்கு. வரிசையில் நின்றவர்களில் முதல் நான்கு இளைஞர்களின் தகவல்களை மட்டும் கேட்டறிந்து உறுப்பினர் படிவத்தைக் கைப்பட நிரப்பி, முகாமை தொடங்கி வைத்தேன்.

உறுப்பினர் சேர்ப்பு படிவத்தில், ‘முன்பு உறுப்பினரா’ என்ற கேள்விக்கு ‘ஆம்... இல்லை’ என்று பதிலளிக்கும் ஒரு பகுதி உள்ளது. நான் உறுப்பினராகச் சேர்த்த அந்த நால்வரில் மூவர், ‘இல்லை’  என்று பதிலளித்தனர். இதன் மூலம், ‘திமுகவில் புதிய இளைஞர்களின் வரவு என்றும் குறைந்ததில்லை’ என்ற உண்மை புலப்படும். அடுத்து சைதாப்பேட்டை தேரடித் தெரு. இங்கும் வந்து முகாமை தொடங்கிவைத்தேன். முகாமை சிறப்பான திட்டமிடலுடன் ஒருங்கிணைத்திருந்த மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி, அமைப்பாளர் பிரபாகர் ராஜா உள்ளிட்ட இளைஞர் அணித் தோழர்களுக்கு வாழ்த்துகள்.

முதல்நாளிலேயே, எதிர்பார்த்ததைவிட அதிக உறுப்பினர்களைச் சேர்த்து விட்டோம் என்று அடுத்தடுத்த நாள்களில் சொகுசாகச் சோர்ந்து அமர்ந்து விடக்கூடாது. ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்று இந்தியை திணிக்க முயல்பவர்களும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்று அறிவிப்பவர்களுமே பரபரப்பாக குறுக்கு மறுக்காக ஓடிக்கொண்டிருக்கையில், இந்த மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டிய இடத்தில் உள்ள நாம் அவர்களைவிடக் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். காலக்கெடுவில் ஒருநாள் முடிந்து விட்டது என்பதை உணர்ந்து தொடர்ந்து பயணப்படுவோம், இணைந்திருப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : youth team ,DMK ,Udayanidhi Stalin , First Day, DMK Youth Team, Greater Membership, Greatest Success, Udayanidhi Stalin, Report
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்