போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறல்: இந்த ஆண்டில் இதுவரை 2,050 முறை தாக்குதல்... ரவீஷ் குமார் பேச்சு

டெல்லி: பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 50க்கும் அதிகமான முறை எல்லை தாண்டி அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்நாட்டுப் படைகள் அப்பாவி மக்களை குறி வைத்து தாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் எழுப்ப முயற்சித்த பாகிஸ்தானுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது. எந்த நாடும் அதனை ஆதரிக்க முன் வரவில்லை. இதனையடுத்து, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பில், காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டியது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவ செய்ததை விளக்கமாக எடுத்து கூறியது.

இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில்; பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இந்திய நிலைகள் மீதும், தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய நிலைகள் மட்டுமன்றி அப்பாவி மக்களும் குறிவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலையை தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 பேர் உயிர் இழந்துள்ளனர்.

எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லை நெடுகிலும் 2003-ஆம் ஆண்டு மெற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பலன் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியப் படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் அத்துமீறல் தாக்குதலையும், தீவிரவாத ஊடுருவல்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை இருப்பதாக அவர் கூறினார்.

Tags : Pakistan ,ceasefire ,attacks , Pakistani Infiltration, Attack, Ravish Kumar
× RELATED சேலம் அருகே யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு