×

ஆவணி பிரமோற்சவ விழா: அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பழநி: பழநி அருகே பாலசமுத்திரத்தில் உள்ள அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா 11 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்தாண்டு திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு 16 வகையான பொருட்களால்  அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அப்பளம் உடைத்தல், மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் போன்ற பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார்,

மேலாளர் உமா, கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்றிரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது.  காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. 17ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் 11 நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை, பக்திச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பாசுரங்கள் சேவித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

Tags : Avani Promotional Festival ,Aikopila Varadaraja Perumal Temple , Avani Promotional Festival, Akopila Varadaraja Perumal Temple, Tirukkalyanam
× RELATED மாஞ்சா நூல் கழுத்தறுத்து வெல்டிங் ஊழியர் காயம்