×

கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் வறட்சியால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு: ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

கோவில்பட்டி: கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் கடும் வறட்சியால்  கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் கரிமூட்டம் தொழில் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி,  எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், தாப்பாத்தி போன்ற பல்வேறு  சுற்றுவட்டார கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகும். இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். மழையை நம்பி பருத்தி, வத்தல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். பருவமழை ஏமாற்றம் அளித்தால் கடந்த காலங்களில் வறட்சி ஏற்படும் போது,  பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல  மரங்களை வெட்டி, அதனை மூட்டம் போட்டு கரியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம்  பெற்று வந்தனர். இதனால் விவசாயத்திற்கு அடுத்து கரிமூட்டம் போடும்  தொழிலை பிரதான தொழிலாக விவசாயிகள் செய்து வந்தனர். இப்பகுதியில்  கரிமூட்டம் தொழிலில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  கரிமூட்டம் தொழிலுக்கு தண்ணீர் முக்கிய தேவையாகும். அதாவது, கரியை மூட்டம் போட்டு எரிக்கும் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரும் போது அதை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். அப்போது தான் தரமான கரி கிடைக்கும். ஒவ்வொரு ரக கரிக்கும் ஒவ்வொரு ரேட் உண்டு. தண்ணீர் இல்லையெனில் முழுவதும் சாம்பலாகி விடும்.

எனவே கரி மூட்டம் தொழிலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.  இப்பகுதியில் தயாரிக்கப்படும் கரி தூர்கரி,  உருட்டுகரி, பக்கடா கரி, குச்சி கரி என பல்வேறு ரகங்களில் மரக்கரி  தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிமென்ட் தொழிற்சாலைகள், வேதி தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர டீ, காபி கடைகளுக்கும், பட்டறைகளுக்கும், ெநருப்பு மூட்டுவதற்கும், ஓட்டல்களில் பாய்லர்களில் தண்ணீரை சுட வைப்பதற்கும், சுண்ணாம்பு தயாரிப்பிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது மட்டுல்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற  மாநிலங்களுக்கும் தொழிற்சாலைகளின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பார்ப்பதற்கு கரி என்றாலும் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் முக்கிய தொழிலாகவே கரி மூட்டம் தொழில் உள்ளது.இந்தத் தொழிலில் ஆண்கள்  மட்டுமின்றி கிராமப்புற பெண் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் ஏராளமான தொழிலாளர்கள் கரிமூட்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நல்ல லாபத்தை அளித்து வந்த கரிமூட்டம் தொழில் தற்போது கடும் வறட்சியால்  பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம்,  புதூர், நாகலாபுரம் போன்ற பகுதி கிராமங்களில் தற்போது குளங்கள் தண்ணீரின்றி  வறண்டு காணப்படுகின்றன. மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

 இதனால் கரிமூட்டம் போடும் தொழிலுக்கு தேவையான தண்ணீர்  கிடைக்காமல் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை  தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒரு டிராக்டர் தண்ணீரை  ரூ.ஆயிரத்து 500 வரை விலைக்கு வாங்கி கரிமூட்டம் தொழிலை நடத்தி  வருகின்றனர். ஒரு டன் மரக்கரி ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.13  ஆயிரம் வரை விலை போகிறது. இந்த மரக்கரிக்கு நல்ல தேவை இருந்தும்  தண்ணீரின்றி உற்பத்தி செய்ய முடியாத பரிதாப நிலைக்கு தொழிலாளர்கள்  தள்ளப்பட்டுள்ளனர். கடும் வறட்சியால் கரிமூட்டம் தொழில்  பாதிக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள்  வேலைவாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்து வருகின்றனர்.  இதுகுறித்து கோவில்பட்டி அருகே கருப்பூரைச் சேர்ந்த கரிமூட்ட தொழிலாளர்  கோவிந்தராஜ் கூறுகையில், ‘கோவில்பட்டி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக  பருவமழை பெய்யாத காரணத்தால் தண்ணீரில்லாமல் மரக்கரி தயாரிக்கும் தொழில்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை தனியாரிடம் விலைக்கு வாங்கி அதனை லாரி  மற்றும் டிராக்டர் மூலம் கொண்டு சென்று கரிமூட்ட தொழிலை நடத்துகிறோம்.  கரிமூட்ட தொழிலுக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை. இதனால்  வெளியிடங்களில் கடன்களை பெற்று தொழில் நடத்தி வருகிறோம். கோவில்பட்டி,  விளாத்திகுளம் பகுதியில் தயாரிக்கப்படும் மரக்கரிக்கு வட மாவட்டங்களில்  நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அரசு இத்தொழில் நடத்தி வருவோருக்கு வங்கிகள்  மூலம் கடனுதவி வழங்கி, இத்தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்’ என்றார். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், கரிமூட்டம் தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொழில் பாதிப்பு குறித்து மனு அளித்தால், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.

வங்கிக் கடன் வழங்கப்படுமா?
கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில்,  ‘கோவில்பட்டி,  விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் போன்ற பகுதிகளின் சுற்றுவட்டார  கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் கரிமூட்டம் போடும் தொழில்  நடத்தி  வருகின்றனர். தற்போது மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால்  கரிமூட்டம்  போடும் தொழில் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒரு சிலர்  தண்ணீரை  விலைக்கு வாங்கி இத்தொழிலை நடத்தி வருகின்றனர். இதனால் கரிமூட்டம்  தொழில்  நடத்துவோருக்கு சிறு தொழிலாளர்களுக்கான வங்கி கடனுதவியை அரசு வழங்க   வேண்டும். முத்ரா கடன் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கினால்,   கரிமூட்டம் தொழில் நடத்துவோரின் எதிர்கால வாழ்வாதாரம் சிறப்பாக அமையும்’ என்றார்.Tags : drought ,Kovilpatti ,area ,Valathikulam , Kovilpatti, Valathikulam , industry,laid off
× RELATED கோவில்பட்டியில் மதிமுகவினர் மறியல்