×

நாகர்கோவிலில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்: டவுண் ரயில் நிலையத்தில் மேம்பால பணி நிறைவு

நாகர்கோவில்:  நாகர்கோவிலில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டவுண் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. தற்ேபாது பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய எப் பிரிவு ரயில் நிலையம் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் ஆகும். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேளி, கொல்லம் மெமு, கோட்டயம் போன்ற பயணிகள் ரயில்கள் இங்கு நின்று செல்கிறது. திருநெல்வேலி - பிலாஸ்பூர், திருநெல்வேலி - ஹப்பா வாராந்திர ரயில்களும் நின்று செல்கின்றன. இது மட்டுமில்லாமல் திருநெல்வேலி - மும்பை, திருவனந்தபுரம் - சென்னை ஆகிய சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த டவுண் ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதி கிடையாது. முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெற முடியும். இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும் இல்லை. தண்டவாளமும், நடைமேடையும் ஒரே உயரத்தில் உள்ளன. இந்த நடைமேடையில் இருந்து ரயில் ஏற வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதி, பயணிகளுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகள் இங்கு இல்லை.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை விட்டால் அடுத்து 19 கி.மீ. தொலைவில் உள்ள இரணியல் ரயில் நிலையம் தான் கிராசிங் நிலையமாக உள்ளது. எனவே டவுன் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. 2010 ல் ரூ.5 கோடி செலவில் தொடங்கப்பட்ட மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் கிடந்தன. டிக்கெட் கவுண்டர்கள், பயணிகள் ஓய்வு அறை போன்றவை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள்  தொடங்கியதை தொடர்ந்து, டவுன் ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் தொடங்கின. அதன்படி டவுன் ரயில் நிலையத்தில் மொத்தம் 3 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போதுள்ள தண்டவாளம் 2 வது பிளாட்பாரமாக மாறுகிறது. இதன் இடது மற்றும் வலதுபுறம் முதல் மற்றும், 3 வது பிளாட்பாரங்கள் வருகிறது.

 இதில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2, 3 வது பிளாட்பாரங்களுக்கு செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் முடிவடைந்து நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடுதல் தண்டவாளத்துக்கான தரை தளம் சமன்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. இந்த பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பயணிகள் ஓய்வு அறை, டிக்கெட் கவுண்டர் அறை ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் பயணிகள் கூறி உள்ளனர்.

Tags : railway ,Nagercoil , Nagercoil, Dual railway , Town Railway Station ,completed
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...