×

6 சாலைகள் சந்திக்கும் மரப்பாலம் போக்குவரத்து நெரிசலில் திணறும் புதுச்சேரி-கடலூர் சாலை

* கிடப்பில் சாலை விரிவாக்க திட்டம்
* வாகன ஓட்டிகள் கடும் அவதி

 புதுச்சேரி மரப்பாலம் சிக்னலில் 6 சாலைகள் சந்திப்பதால், தினமும் கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால், கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்க திட்டத்தை புதுச்சேரி அரசு துரிதமாக நிறைவேற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரிக்கிறது. அதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018-19ம் நிதியாண்டு முடிவில் போக்குவரத்து துறை மூலம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 65 ஆயிரத்து 515 ஆக உள்ளது. இதில் 85 சதவீதம் இருசக்கர வாகனங்கள். ஒரு வீட்டில் கூட குறைந்தபட்சம் 2 அல்லது 3 இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. ஆனால், புதுச்சேரியில் பொது போக்குவரத்து என்பது மிகவும் குறைவாக உள்ளது. இதனால் நகரம் மட்டுமின்றி கிராமங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். ஆனாலும், நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. நகரப்பகுதி முதல் கிராமம் வரை பெரும்பாலான இடங்களில் சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் குறுகியதாக உள்ளது. போதாக்குறைக்கு ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன. இதனால் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, உப்பளம் சாலை, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை, ரெட்டியார்பாளையம் சாலை என முக்கிய சாலைகளில் பரபரப்பான நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

 இதில் உச்சக்கட்டமாக, மரப்பாலம் சிக்னலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பகுதி நூறடி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கடலூர் செல்வதற்கும், கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் புதுச்சேரி நகர பகுதிக்கு செல்வதற்கும், நூறடி சாலை வழியாக பேருந்து நிலையம் மற்றும் விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. மேலும், புதுச்சேரியிலிருந்து கடலூர் சாலை மற்றும் புவன்கரே சாலை வழியாக வரும் வாகனங்கள் இந்த சிக்னலை கடந்துதான் கடலூர் செல்ல வேண்டும். அதேபோல், தேங்காய்த்திட்டு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இப்பகுதியை கடந்துதான் நூறடி சாலை மற்றும் கடலூர் சாலையை பிடிக்க வேண்டும். இதுதவிர, மரப்பாலம் சிக்னலுக்கு அருகே வேல்ராம்பட்டு செல்லும் சாலையும் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியை சுற்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரி, துணை மின் நிலையம், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் இயங்கி வருகின்றன. இதனால்  தினமும் காலை, மாலை நேரங்களில் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே புதுச்சேரியிலிருந்து கடலூருக்கும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும் ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. இதன் காரணமாக, தினமும் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது.

 இங்கு போக்குவரத்தை சரி செய்ய போலீசார் பணி அமர்த்தப்படுகின்றனர். இருப்பினும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நூறடி சாலை மற்றும் கடலூர் சாலையில் வரிசை கட்டி வாகனங்கள் நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் இந்த சிக்னலை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் பெரும் தலைவலியை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒரு சவாலாக இருந்து வருகிறது. தினமும் காலை 7.30 மணியிலிருந்து காலை 10 மணி வரையும், மாலை 3.30 மணியிலிருந்து 6.30 மணி வரையிலும் ஆமை போல வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கடலூர் சாலையை அகலப்படுத்தாததே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நூறடி சாலை அளவுக்கு கூட  கடலூர் சாலை இல்லை. இது மிகவும் குறுகிய சாலையாக இருப்பதுடன் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பும் அதிகமாக உள்ளது. இதனால் மரப்பாலம் சிக்னல் முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவை கூட இவ்வழியில் செல்ல முடியாமல் அப்படியே நிற்கின்றன. இப்பகுதியை கடந்து செல்ல 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. இப்பிரச்னை ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்திலும் மரப்பாலம் சிக்னலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்த பிரச்னை கேள்வி நேரத்தின் போது விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, முருங்கப்பாக்கம் முதல் மரப்பாலம் வரை தினசரி ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை போக்கிட அரசின் திட்டம் என்ன? என்று எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை மூலம் ரோட்டை அகலப்படுத்த ரூ.30 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் 2014ல் வந்த புதிய விதிகளின்படி அதிக செலவாகும். ரோட்டை 24 மீட்டர் அகலப்படுத்துவதா? அல்லது 30 மீட்டர் அகலப்படுத்துவதா? என்பது பற்றி அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளது என்று பதில் அளித்திருந்தார். இதனால் சாலை எப்போது அகலப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த  வேண்டும். அப்போதுதான் மரப்பாலம் சிக்னலில் தினமும் வாகன ஓட்டிகள் படும் இன்னல்களும் குறையும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்க வேண்டும்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், `புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றாக மரப்பாலம் சிக்னல் உள்ளது. இப்பகுதியை சுற்றி பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடலூர் சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டது. இதனால் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க ஒரே வழி, உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வாகனங்களை வீட்டிலேயே நிறுத்திவிட்டு மரப்பாலம் சிக்னலை தினமும் நடந்து சென்றுதான் கடக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்றனர்.

Tags : road ,Puducherry ,Cuddalore , Puducherry - Cuddalore Road, jammed ,traffic
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...