×

நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல் திருச்சியில் 12 வருடமாக கிடப்பில் போடப்பட்ட ரிங்ரோடு திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசு முயற்சிக்குமா?

தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி மாநகரம் விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் எந்த பகுதிக்கு செல்லலாம். அதன்படி திருச்சியிலிருந்து, திண்டுக்கல், கரூர், சென்னை, தஞ்சை, புதுகை, மதுரை, சேலம் என எந்த பகுதிக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சி வழியாகத்தான் பல்வேறு நகரங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. திருச்சி மாநகரில் எந்நேரம் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் சரக்கு வாகனங்களும் நகரின் உள்ளே சென்று பின்னர் மற்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்ல வேண்டும். இதனால் அடிக்கடி போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் அதிகளவில் போக்குவரத்து இருக்கும் என்பதால், அந்த சமயங்களில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்திருக்க வேண்டிய சூழலும் வரும்.இதனால் கனரக வாகனங்கள் நகருக்குள் வராத வண்ணம் மாற்று வழியில் திருச்சியை கடந்து இலகுவாக செல்ல புதிய திட்டத்தை உருவாக்க முடிவெடுக்கப்பட்–்டது. அதன்படி திருச்சி-கரூர் சாலையில் உள்ள ஜீயபுரத்–்தை, திருச்சி-தஞ்சையில் உள்ள துவாக்குடியில் இணைக்கும் அரைவட்ட சாலைப்பணி (ரிங்ரோடு) திட்டம் கடந்த 2005-2006ல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. அனுமதி கிடைத்து இதற்கான சாலை பணிகள் கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இது மொத்தம் 43 கி.மீ தொலைவு ஆகும். இதில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுகிறது. அதன்படி திருச்சி-கரூர், திருச்சி-திண்டுக்கல், திருச்சி-மதுரை, திருச்சி-புதுக்கோட்டை, திருச்சி-தஞ்சை ஆகிய ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் இதில் இணையும்.
இந்த திட்டப்பணிகளை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி ஜீயபுரம் முதல் பஞ்சப்பூர் வரை ஒன்றும், பஞ்சப்பூர் முதல் துவாக்குடி வரை ஒன்றும் என பிரிக்கப்பட்டது. பஞ்சப்பூர்-துவாக்குடி 25கி.மீ, ஜீயபுரம்-பஞ்சப்பூர் 18 கி.மீ தொலைவுகள் அடங்கும்.
பணிகள் மும்முரமாக நடந்து வந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள தாயனூரிலிருந்து, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஜீயபுரத்திற்கும் இடையில் உள்ள 17 குளங்கள் மற்றும் ஏரிகள் பாதிக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவை பெற்றார். இதையடுத்து இந்த அரைவட்ட சாலை பணிகள் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு நடந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் சாலையை குளங்கள் இல்லாத பகுதியிலோ, அல்லது குளக்கரையோர பகுதிகளிலோ அமைக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை 2011ம் ஆண்டு முடித்து வைத்தனர்.இதையடுத்து 2011ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை வரைபட அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்குள் சட்டமன்ற தேர்தலும் இடையில் வந்தது. அதன்பின்பு இந்த பணிகள் பற்றி யாரும் கண்டு கொள்ள வில்லை. இதனால் இன்று வரை இதற்கான பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது.

பொதுமக்கள் தொடர் கோரிக்கைகளால் கடந்த 2018ம் வருடம் திருச்சி கலெக்டராக இருந்த ராசாமணி இந்த பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்பின்பு புதிதாக பொறுப்பேற்ற சிவராசு இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கைகளால் பஞ்சப்பூர்-துவாக்குடி வரை உள்ள சாலைகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்டது.ஆனால் ஜீயபுரம்-பஞ்சப்பூர் பகுதியில் தான் திட்டம் துவங்கப்பட்டு 12வருடம் கடந்த நிலையில் இன்னும் நிலம் கூட கையகப்படுத்தாமல் பணிகள் துவங்கப்படவில்லை. இதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் அரசுதுறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நெடுஞ்சாலைத்துறையினர் இந்த அரைவட்ட சாலைப்பணிக்கு முறையாக அறிவிப்புகளை விளம்பரங்கள் வாயிலாக செய்திதாள்களில் வெளியிட வேண்டும். அதில் யார் யார் நிலங்கள் தேவைப்படுகிறது. எவ்வளவு ஒவ்வொருவரின் நிலத்திலும் எவ்வளவு அளவுகள் தேவைப்படுகிறது என்ற விபரங்கள் அதில் அடங்கும். அதன்பின்னர் அந்த நிலங்களுக்கு நில மதிப்பில் உள்ள படியான தொகை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கி, நிலம் நெடுஞ்சாலைத்துறையினர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்க வில்லை. இருந்த போதிலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் 6 மாதங்களில் பணிகள் துவங்கும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் அலட்சியம்
சாலை பயனீட்டாளர் நலக்குழு உறுப்பினர் அய்யாரப்பன் கூறுகையில், 2011ல் வழக்கு முடிந்து சாலைப்பணிகளை தொடங்காமல் இருப்பது கண்டனத்து உரியது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். பஞ்சப்பூரிலிருந்து-துவாக்குடி பகுதி காரைக்குடி நெடுஞ்சாலைத்துறைக்கும், பஞ்சப்பூரிலிருந்து ஜீயபுரம் பகுதி கரூர் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வருகிறது. தற்போது கரூர் கோட்டத்தில் திட்ட இயக்குனர் பணி காலியிடமாக உள்ளது. இதற்கு கோவை நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். அரைவட்ட சாலைப்பணிகள் தொடங்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. எனவே கரூர் நெடுஞ்சாலை திட்ட இயக்குநருக்கு இந்த சாலை பணியை முடிக்க அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த சாலைப்பணி விரைந்து முடிக்கப்படும் என்றார்.

நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும்
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறுகையில், கோர்ட் வழக்கு நிலுவையினால் சாலை பணிகளை தொடர முடியவில்லை. கோர்ட் வழக்கு முடிந்துவி–்ட்டது. இதனால் மாற்று வழியில் சாலை அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி கருத்துக்கள் கேட்கப்பட்டு விட்டது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் துவங்கி விரைவில் முடிக்கப்பட்டு சாலை பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Tags : Trichy , Rajpuram Pathmalai ,freedom,decades...
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்