×

இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒன்று என ஆட்டிப்படைக்கும் ‘சைபர்’ குற்றங்கள்

* மூன்று ஆண்டுகளில் 350 சதவீதம் அதிகரிப்பு
* வினோத மோசடிகளால் திணறும் பொதுஜனம்

சேலம்: விஞ்ஞானத்தின் அசுரப்பாய்ச்சல், விந்ைதயாய் தினமும் நம் சிந்தையில் சுழன்று  கொண்டிருக்கிறது. இணையத்தின் ஈடற்ற வளர்ச்சி, உலகத்தை உள்ளங்கையில் அடக்கி வைத்திருக்கிறது. இந்த மாற்றம் என்பது முன்னேற்றத்தின் முதுகெலும்பாகவும், வளர்ச்சிக்கான வரப்பிரசாதமாகவும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.... அதே நேரத்தில் வக்கிரங்களுக்கும், வன்மங்களுக்குமான வழி காட்டியாகவும் இருப்பது துரதிர்ஷ்டம். தொடரும் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கே மேலும் தேவையாக இருப்பதும் தொழில் நுட்பம் தான். அதேநேரத்தில் விதிகளை மாற்றி எழுதும் ஆற்றல் பெற்ற மனிதர்களின் மதியிலிருந்து எதிர்மறை எண்ணங்கள் வெளியேறிவிட்டால் விஞ்ஞானம், வியப்புகளின் களமாக மட்டுமே ஜொலிக்கும் என்பது நிதர்சன உண்மை.இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்ற நிலைமையும் வந்துவிட்டது. ெதாழில் நுட்பத்தின் உச்சமான இணையம் என்பது ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய  முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னொரு பக்கம்  ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் வாட்டுகிறது. மார்பிங் செய்த ஆபாச படத்தை வெளியிட்டதால் மாணவி தற்கொலை, பேஸ்புக்கில் ஏமாற்றி திருமணம் செய்வதாக மோசடி, பணம் பறிப்பு, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஏடிஎம் கார்டு நம்பரை வாங்கி பணமோசடி என்று தினமும் நம்மை கடந்து செல்லும் பல, வினோத குற்றங்களுக்கு இணையத்தின் வளர்ச்சியே முன்னுரை எழுதுகிறது.

கொலை, ெகாள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, ஆள்கடத்தல் என்று வழக்கமான குற்றங்களை விசாரிக்க காவல்துறை உள்ளது. அதே நேரத்தில் தொழில் நுட்பத்தால் உருவாகும் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு, காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றங்கள் என்பது தொழில்நுட்பங்களை குறிவைத்து அல்லது தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து  செய்யப்படும் குற்றங்களாகும்.  தகவல் தொழில் நுட்ப சேவைகளை திருடுவது, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து  தகவல்களை திருடுவது, தகவல்களை அழிப்பது,  இணயத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது, மற்றவர்களின் தகவல்களையோ,  புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது, சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது,  மின்னஞ்சல்  மற்றும் இன்டர்நெட் மூலம் கொலை மிரட்டல் விடுப்பது, இணையவழி பொருளாதார  குற்றங்களில் ஈடுபடுவது, மற்றவர்களின் மின்னஞ்சல் மற்றும் சோசியல் நெட்வொர்கிங் கணக்குகளை  திருடி அவதூறு பரப்புவது என்று சைபர் கிரைம் சார்ந்த குற்றங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தியாவில்  இணைய குற்றங்கள்  அதிகரித்து வருவதாகவும், 10 நிமிடங்களுக்கு  ஒருமுறை கணினி  தொடர்பான குற்றங்கள் நடப்பதாகவும் புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன. கடந்த  மூன்று ஆண்டுகளில் நடந்த சைபர் கிரைம்களின்  எண்ணிக்கை 1.71 லட்சம். இது போன்ற குற்றங்களை தடுப்பதில் மிகவும் கடுமையான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்திய தகவல் தொழில்நுட்ப  சட்டம் (2008) இதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.  எனினும், இந்த தொழில்  நுட்பங்களை செயல்படுத்துவதில் மாநில அரசுகளின் செயல்முறை போதுமானதாக இல்லை என்பது வேதனை. இந்த  குற்றங்களை தடுக்க வேண்டுமெனில் இத்துறையில் மிகவும் திறமை வாய்ந்தவர்களும், அதிநவீன தொழில்நுட்பங்களும் மிகவும் அவசியம். ஒவ்வொரு மாநில அரசும்   இதெற்கென ஆராய்ச்சி நிறுவனங்களை ஏற்படுத்தவேண்டும். குற்றத்திற்கு  கடுமையான தண்டனைகள் சரிதான். அனால் அந்த குற்றங்களை கண்டறிய நம்மிடம், நவீன தொழில்நுட்பங்கள் முக்கியம் என்கின்றனர், தொழில் நுட்ப  வல்லுநர்கள். அதே ேநரத்தில் நுட்பமான மதியை வக்கிரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற  பண்பு, மனங்களில் நிலைத்து விட்டால், அதுவே நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதும் அவர்களின் ஆதங்கம்.

தமிழகத்தில் 1,940 புகார்கள்
‘‘தமிழகத்தில்  கடந்த 2016 முதல் 2018 வரை, 1,940  சைபர் கிரைம் புகார்கள் வந்துள்ளன.  இந்த புகார்கள் தொடர்பான விவரங்களை  கேட்டு சம்பந்தப்பட்ட சமூக  வலைதளங்களுக்கு சென்னை சைபர் கிரைம் பிரிவு  கடிதம் அனுப்பியது. அதன்  அடிப்படையில், 484 புகார்களுக்கு மட்டுமே  சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரின்   ஐ.பி., அடையாள எண்ணை அந்த நிறுவனங்கள்  வழங்கின. இந்த தகவல்களின்  அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடத்தப்பட்டன.  இவற்றில் பல வழக்குகளில் முடிவு எட்டப்படவில்லை.  சமூக வலை தளங்களின்  நெட்வொர்க் சர்வதேச அளவில் செயல்படும்  நிறுவனங்களிடம்  உள்ளதால் அந்த  நிறுவனங்களிடமிருந்து, உரிய விவரங்களைப் பெறுவதில் பல்வேறு  சிக்கல்கள்  உள்ளன,’’ என்று சமீபத்தில் பொதுநல வழக்கு தொடர்பான  நீதிமன்றத்தின் கள்விக்கு போலீசார், பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

3ஆண்டுகளில் 350 சதவீதம் அதிகரிப்பு
‘‘பேஸ்புக்,  வாட்ஸ் அப் வந்த பிறகு சைபர் கிரைம்  குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி  வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்  சைபர் குற்றங்கள் 350 சதவீதம்  பெருகிவிட்டது. அதேநேரத்தில் சைபர்  கிரைம் குற்றங்களை கண்டுபிடித்து  தண்டிக்கும் அளவிற்கு காவல்துறையினரிடம்  நவீன வசதிகள் இல்லை.  வீதிகளில் நடந்து சென்ற போது  ஏற்பட்ட குற்றச்சம்பவங்கள்  இப்போது வீட்டுக்குள் இருக்கும் பெண்களையும்  விட்டு வைப்பதில்லை. சைபர்  குற்றங்களினால்  சேலம்  வினுப்பிரியா போன்ற ஏழைப்பெண்கள் பலியானதும் இந்த வகையில் தான்,’’ என்று அசோசெம் என்ற அமைப்பின் ஆய்வு  முடிவுகள் தெரிவித்துள்ளது.

Tags : India , Cybercrime Crimes ,Shall ,India
× RELATED தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பால்...