×

வறட்சியால் மடியும் மயில்களை காப்பாற்ற தினமும் 5 கிலோ அரிசி தரும் விவசாயி: சரணாலயம் அமைக்கவும் கோரிக்கை

சாயல்குடி: ராமநாதபுரம் கோவிலாங்குளத்தில் மயில்களை காப்பாற்ற விவசாயி தினமும் 5 கிலோ அரிசியை இரையாக தந்து வருகிறார். மேலும், மயில்களை காப்பாற்ற சரணாலயம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.வறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளது கோவிலாங்குளம் கிராமம். கமுதி, கடலாடிக்கு மத்தியில் அமைந்துள்ள இக்கிராமத்தில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வூர் கண்மாய் இருக்கிறது. அருகில் மலட்டாறு, குண்டாறு ஆறுகளின் பிரிவு கால்வாய் இருந்தும், போதிய நீர்வரத்தின்றி நீர் ஆதாரங்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் மானாவாரி விவசாயத்துக்காக மழையையே இப்பகுதி மக்கள் நம்பி உள்ளனர். குறிப்பாக நெல் மிளகாய், பருத்தி ேபான்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. தற்போது பருவமழை பொய்த்து போனதால் தொடர் வறட்சி ஏற்பட்டு, விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் விவசாயத்தை பெயரளவிற்கு செய்து விட்டு கண்மாய், விவசாய நிலங்களில் சீமைக்கருவேல மரத்தை வளர்த்து, மரத்தை வெட்டி, கரிமூட்டம் தொழில் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் வாழவே சிரமப்பட்டு வரும் நிலையில், இப்பகுதியிலுள்ள சீமைக்கருவேல காடுகளில் நூற்றுக்கணக்கான மயில்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இவை வறட்சியால் இரை தேடி திண்டாடுவதை இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி உக்கிரபாண்டியன் (75) அறிந்தார். அதன்பிறகு தினந்தோறும் இவர், மயில்களுக்கு அரிசி, விஷேச காலங்களில் சாதம் போன்றவற்றை உணவாக அளித்து வருகிறார்.காலை 7 மணிக்கு தனது வீட்டின் முற்றத்தில் காக்கை, அணில், குருவி போன்றவற்றிற்கு இரை போட்டு விட்டு, பையில் அரிசியுடன் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவிலிருக்கும் கருவேல காட்டிற்குள் செல்கிறார். போகும்போதே மயில்களுக்கு ‘பரிச்சயமான’ சத்தத்தை உரக்கமாக வெளியிட்டபடி செல்கிறார்.அவரின் சத்தம் கேட்டு காட்டிற்குள் இருக்கும் மயில்கள் கூட்டம், கூட்டமாக அகவிக்கொண்டு வருகிறது. பின்னர் அங்கு உக்கிரபாண்டியன் தூவும் குறைந்தது 5 கிலோ அரிசியையும் கொத்தி தின்று விட்டுச் செல்கின்றன.

இதுகுறித்து உக்கிரபாண்டியன் கூறுகையில், ‘‘சமீபத்தில் தொடர்வறட்சியால் இரையின்றி ஒரு சில மயில்கள் இறந்து கிடந்ததைக் கண்டு வேதனையடைந்தேன். அதன்பிறகு விலைக்கு அரிசி வாங்கி, மயில்களுக்கு கொடுத்து வருகிறேன். ஊருக்கு அருகில் மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மயில்கள் ஒரு சிலவற்றை தவிர மற்றவை வராது. இதனால் காட்டிற்கே சென்று உணவளிக்கிறேன். தற்போது 400க்கும் மேற்பட்ட மயில்கள் கூட்டமாக வந்து இரையை தின்று செல்கின்றன. கடந்த 11 ஆண்டுகளாக இதனை சேவையாக செய்து வருகிறேன்’’ என்றார்.கோவிலாங்குளம் கிராமத்தினர் கூறுகையில், ‘‘தேசியபறவையும், முருக கடவுளின் வாகனமாகவும் போற்றப்படும் மயில் இனத்தை பாதுக்காக்க இப்பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க அரசு முன்வரவேண்டும். மயில்களை காப்பாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். ஆங்காங்கே தரைமட்டத்தில் தண்ணீர் தேக்கத்தை அமைக்க வேண்டும். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவரும் நேரில் வந்து பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் இதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : sanctuary ,drought , peacocks ,drought, 5 kg , rice farmer,sanctuary
× RELATED கொடைக்கானல் வனச்சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..!!