×

தொடர் சாரலால் கொடைக்கானல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை வார விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.‘மலைகளின் இளவரசியான’ திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசனான ‘ஆப் சீசன்’ எனப்படும். இந்த சமயத்தில் வெயிலின் தாக்கமின்றி இதமான குளிர் இருக்கும். ஆப் சீசனை அனுபவிக்கும் விதமாகவும், வார விடுமுறையை கொண்டாடும் விதமாகவும் நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.

குணா குகை, பைன் பாரஸ்ட், கிரீன் வேலி, தூண் பாறை, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. இதில் தூண்பாறை, கிரீன்வேலி பகுதிகளில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் காண முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும், ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் - டூவீலர் ரைடிங் செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, பியர் சோலா நீர்வீழ்ச்சிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கையழகை கண்டு ரசித்தனர்.சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வட்டக்கானல் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.



Tags : waterfalls ,Kodaikanal , Pouring water ,Kodaikanal waterfalls,Tourists Excitement
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...