×

சிவகங்கையில் எருமைகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் விநோத திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கை:  சிவகங்கை பழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் வினோத திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் நரிக்குறவர் (காட்டுராஜா) சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டு திருவிழாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து கடந்த 10ம் தேதி காப்பு கட்டினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை  நடந்தது. காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை (தலையை அசைப்பது) காத்திருந்து, அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்பட்டன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை சாமியாடுபவர்களும், மற்ற சிலரும் அப்படியே குடித்தனர். காளிக்கு எருமையையும், பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். 11 எருமைகள், 30 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இவ்விழா பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் (ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிடுகின்றனர். அந்த கறியை அந்த குடும்ப வாரிசுகள் எந்த ஊரில் உள்ளார்களோ அவர்களுக்கு கொடுத்தனுப்புகின்றனர். இவ்விழா அனைவரும் முடிவு செய்து ஆண்டுதோறும் அல்லது சில ஆண்டுகள் இடைவெளி விட்டு நடத்தப்படுகிறது. காளி, அசுரனை (எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும், ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்த்தெழும். எனவே ரத்தத்தை சிந்த விடாமல் குடித்து விடுகின்றனர்’’ என்றனர்.


Tags : Sivaganga , Blood , buffaloes, Sivaganga,Festival
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!