×

சிதம்பரம் கோயிலில் ஆகம விதி மீறி திருமண நிகழ்ச்சி: ஏற்பாடு செய்த தீட்சிதர் சஸ்பெண்ட்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நடராஜர் கோயிலில் சித்சபை என்று அழைக்கப்படும் பொன்னம்பலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் இருமுறை நடக்கும் திருவிழாக்களின் போது, மூலவரான நடராஜர் அம்பிகையுடன் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். மிக புனிதம் வாய்ந்த ராஜ்யசபா ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி தொழிலதிபர் மகளுக்கும் சென்னை தொழிலதிபர் மகனுக்கும் கடந்த 11ம் தேதி திருமணம் நடைபெற்ற நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடராஜர் கோயிலின் உள்ளே உள்ள சிவகாமி அம்மன், பாண்டியநாயகம் என கூறப்படும் முருகன் கோயில் ஆகியவற்றில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மரபை மீறி இந்த திருமண நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்ததும், அதனை ஆடம்பரமாக நடத்தியதும், திருமண நிகழ்ச்சிக்கு சிலர் செருப்பு கால்களுடன் வந்ததும் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பக்தர்கள் பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடராஜர் கோயில் தீட்சிதர்களின் பொதுக்குழு நேற்று முன்தினம் இரவு கூடியது.

இந்த கூட்டத்தில் பொது தீட்சிதர்கள் பலர் இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆவேச குரல் கொடுத்துள்ளனர். கூட்டத்துக்கு பின், கோயில் தீட்சிதர்களின் டிரஸ்டிகள் அய்யப்பன் தீட்சிதர், சோமகார்த்தி தீட்சிதர், துணை செயலாளர் நவமணி தீட்சிதர் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த திருமண விழா தற்செயலாக நடந்துள்ளது. நடராஜர் கோயிலில் அம்மன் கோயில், பாண்டியநாயகம் கோயிலில் மட்டுமே திருமணம் நடைபெறுவது வழக்கம். திருமணம் நடந்த அன்று நடராஜர் கோயிலில் உள்ள 7 பரிவார சாமி சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடராஜர் சன்னதி முன்பு திருமணம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், மற்ற நிகழ்ச்சிகளை ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது தவறு தான், நாங்கள் மறுக்க வில்லை. இதனை வைத்து சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதனால் பக்தர்கள், ஆன்மிகவாதிகள் மனது புண்பட்டதாக அறிகிறோம். அதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வோம். பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இந்த திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பட்டு தீட்சிதருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்துள்ளோம் என்றனர். இந்நிலையில் தமிழ் தேசிய பேரியக்கம் கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் தீட்சிதர்களை கைது செய்யவும் வலியுறுத்தியுள்ளது.

Tags : Wedding Ceremony of Chidambaram Temple , Chidambaram Temple, Augusta Rule, Marriage, Concert, Dixithar, Suspend
× RELATED திக்கு தெரியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்