×

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் மின்னல் தாக்கி கோபுரம் சேதம்

செய்யாறு: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் மின்னல் தாக்கியதில் கோபுரம் மற்றும் இடிதாங்கி கருவி, சிசிடிவி கேமராக்களும் சேதமடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று மாலை 5.45 மணியளவில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின்போது, செய்யாறில் உள்ள பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தின் மீது மின்னல் தாக்கி, யாழி கொடுங்கை மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், ராஜகோபுரத்தில் வைத்திருந்த இடிதாங்கி கருவியும் உடைந்து கீழே விழுந்தது.

கோயில் ராஜகோபுரம் சேதமடைந்த தகவல் பரவியதும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திரண்டு வந்து கோயிலை பார்வையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், மின்னல் தாக்கியதில் கோயிலில் உள்ள மின்சாதன பொருட்களான சிசிடிவி கேமராக்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், யுபிஎஸ், மின்விளக்குகள் சேதமடைந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் மின்விளக்குகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து, ராஜகோபுரம் சேதமடைந்ததையொட்டி சிவாச்சாரியார்கள் பரிகார பூஜைகள் செய்தனர். சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்ததால் கொள்ளை சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க கோயில் ஊழியர்கள் இரவு பணிக்காக கோயிலில் தங்க வைக்கப்பட்டனர். இடிதாங்கி கருவி 50 ஆண்டுகளுக்கு முன்பே ராஜகோபுரத்தில் பொருத்தியிருந்ததாகவும், அதில் உள்ள வயர் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Tags : tower , Vedapureeswarar temple, lightning strikes, tower, damage
× RELATED சென்னையில் அமைக்கப்பட்டு வரும்...