×

பந்தலூர் அருகே சீரான குடிநீர் கோரி பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல்

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா வாளவயல் முருகன்கோவில் பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா வாளவயல் முருகன் கோவில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் சமீபத்தில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. கிணற்றில் போதிய குடிநீர் இல்லாததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.இப்பகுதியில்  நிரந்தர குடிநீர் திட்டங்கள் எதுவும் இல்லாததால் கோடை காலங்களில் தொடர்ந்து குடிநீர் பிரச்னை ஏற்படுவதும், கிராமமக்கள்  சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில் நேற்று காலை குடிநீர் வழங்காத நெல்லியாளம் நகராட்சியை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் தேவாலா வாளவயல் முருகன்கோவில் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் தேவாலா கரியசோலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேவாலா சப்.இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் பிரபாகரன்,நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் சிவகுமார் ஆகியோர் சென்று கிராம மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர். உடனடியாக லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மக்களை சமாதானம் செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்தி சீரான குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர்.அதன் பின்னரே கிராமமக்கள் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்….

The post பந்தலூர் அருகே சீரான குடிநீர் கோரி பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Dewala Walavyal Murugan ,Dinakaran ,
× RELATED பழங்குடியினர் காலனியில் கனமழையால் மண்சரிவு