×

என்னை ஏமாற்றி விட்டனர், என்னிடம் பணம் இல்லை ரூ.25 கோடி மோசடியில் சரணடைந்த பெண் பரபரப்பு வாக்குமூலம்: லாரி உரிமையாளருக்கு வலை

நாமக்கல்: நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சரணடைந்த பெண், தன்னை சிலர் ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை எனவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, ரூ.1 கோடியுடன் சென்னையில் பதுங்கிய லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(49). இவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என பல்வேறு பிரிவுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, பணம் கட்டியவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனிடையே, திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, இவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்து, பணம் கட்டி ஏமாந்தவர்கள், கடந்த மாதம் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், கலைச்செல்வி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என 7 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து, தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, சேலம் நீதிமன்றத்தில் கலைச்செல்வி சரண் அடைந்தார்.   

இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கலைச்செல்வியை 2 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பின் நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வியை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையின் போது, தான் நம்பிய உறவினர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை எனவும் கலைச்செல்வி கூறியுள்ளார். மேலும், பணத்தை வாங்கி கொண்டு யார், யார் ஏமாற்றினார்கள் என்ற விபரத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கலைச்செல்வி கூறிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளனர். போலீசாரால் தேடப்பட்டு வரும் லாரி உரிமையாளர் பொன்னுசாமி(56), சென்னையில் தலைமறைவாக இருக்கிறார். அவர், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : I have cheated, I have no money, Rs 25 crore fraud, surrender woman, confession, lorry owner, web
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...