×

இன்று திமுக முப்பெரும் விழா அண்ணா வழியில் தமிழ் காக்கும் பணியில் ஈடுபடுவோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக நிறுவனர் அண்ணாவின் 111ம் பிறந்தநாள், செப்டம்பர் 15. எப்பக்கத்திலிருந்தாவது எப்படியாவது இந்தியைத் திணித்துவிட முடியாதா என்று மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு பலவித முயற்சிகளைச் செய்து நுழைக்கப் பார்க்கிறது. ரயில்வே துறையில் சுற்றறிக்கைகள் உத்தரவுகள் ஆகியவை மாநில மொழியில் வெளியிடப்பட மாட்டா என்றும், இந்தி - ஆங்கிலத்தில்தான் வெளியிடப்படும் என்றும், ஓர் அறிவிப்பு வந்தவுடன், தி.மு.கழகம் உடனடியாக அதனை எதிர்த்துக் களமிறங்கியது.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கழக நிர்வாகிகள் உடனடியாக தெற்கு ரயில்வே அலுவலகம் முன் கழகத்தின் இருவண்ணக் கொடிகள் தாங்கிப் போராட்டம் நடத்தி, பொது மேலாளரை சந்தித்து, இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திடச் செய்தேன். இதையடுத்து, என்னுடன் அலைபேசியில் உரையாடிய தெற்கு ரயில்வே பொதுமேலாளர், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார்; அப்படியே ரத்து செய்யப்பட்டது. இது அண்ணா வழியில் - அவர்தம் அன்புத் தம்பி தலைவர் கலைஞர் வழியில் - கழகம் மேற்கொண்ட முயற்சியால் தமிழுக்குக் கிடைத்த வெற்றி.

அதுபோலவே, அஞ்சல் துறையில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு இடமில்லை என்றும் இந்தி - ஆங்கிலம் மட்டுமே இருக்கும் என்றும் அத்துறை அறிவித்தபோது, அதனை எதிர்த்துக் களமிறங்கியது திமுக. அதன் காரணமாக, அந்தத் தேர்வு கைவிடப்பட்டு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுடன் தேர்வு நடத்தப்பட்டு, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெறவும், எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட சிலரே பறித்துக் கொள்ளும் குறைபாடு நீங்கவும் கழகத்தின் பணி அமைந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டபோது, அந்தப் பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை எனத் தெரிந்தவுடன், உடனடியாகத் தமிழிலும் தீர்ப்புகளை வெளியிட ஆவன செய்ய வேண்டும் என குரல் கொடுத்தேன். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து கழகத்தின் சார்பிலான மனுவையும் அளித்தார். அதன்காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழில் வெளியிடப்பட்டது. தி.மு.கவின் முயற்சியினால், தமிழுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி இது.

ரயில்வேயில் பொதுபோட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை என்றும், இந்தியிலும் - ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தினால் போதும் என்றும், அறிவிப்பு வெளியானவுடனேயே போர்க்கோலம் பூண்ட இயக்கம் திமுக. இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்திற்குத் தூபம் போட வேண்டாம் என மத்திய அரசை எச்சரித்து அறிக்கை வெளியிட்டதுடன், போராட்டக் களமும் கண்டதினால், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ் மொழியைக் காக்க அண்ணா வகுத்துத் தந்த வழியில் வாய்மையுடன் நடைபோடுகிறோம்; போராடுகிறோம். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற தலைவர் கலைஞரின் வைரவரிகளை நெஞ்சில் ஏந்தி, அன்னைத் தமிழ் காக்கும் பணிகளை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து ஆற்றிடுவோம். அதில் பெறுகின்ற வெற்றிகளை அண்ணா அவர்களுக்குக் காணிக்கையாக்கிடுவோம் என அவர் பிறந்தநாளில் சூளுரையேற்போம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,MK Stalin ,Tamils , Today DMK big function, Anna way, Tamil preservation mission, DMK leader MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...