×

வரும் 3ம் தேதி வரை வாங்கலாம் பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த பொருட்கள் ஏலம்: கங்கை சீரமைப்புக்கு நிதியை பயன்படுத்த முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அக்டோபர் 3ம் தேதி வரை நடக்கும் இந்த ஏலம் மூலம் கிடைக்கும் நிதி, கங்கை ஆற்றின் சீரமைப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்லும்போது அவருக்கு பரிசாக கிடைக்கும் பொருட்கள், நினைவு பொருட்களை மத்திய அரசு ஏலம் விட்டு வருகிறது. இது போன்ற ஏலம் விடும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த ஓரு ஆண்டாக மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலம் விடும் நிகழ்ச்சியை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

டெல்லியில் உள்ள தேசிய நவீன கலை மாடத்தில் இந்த பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை தினமும் காலை 11 மணி முதல் 8 மணி வரை பார்வையிடலாம். இங்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், நினைவுப் பரிசுகள், சிலைகள், பாரம்பரிய இசைக் கருவிகள், சால்வைகள், ஜாக்கெட்டுகள் தலைப்பாகைகள் உள்ளிட்ட 2,700 நினைவுப் பரிசுகள் இன்று முதல் ஆன்லைனில் ஏலம் விடப்படுகின்றன. வரும் 3ம் தேதி வரை நடைபெறும் ஏலத்தில், pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் பங்கேற்கலாம். இந்த பொருட்கள் குறைந்தப்பட்சம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படும். இதில் கிடைக்கும் தொகை, கங்கை ஆற்றின் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

‘ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள்’
பிரதமர் மோடி விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், `கடந்த ஒரு ஆண்டாக எனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சனிக்கிழமை தொடங்கியுள்ளது. அக்டோபர் 3 வரை நடக்கும் இந்த ஏலத்தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன்,’ என கூறியுள்ளார்.

Tags : Modi , PM Modi, Auction, Gang Reconstruction and Finance
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...