×

30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முழுவீச்சில் மிரட்டும் ‘டிப்தீரியா’

தேனி:டிப்தீரியா... இந்த பேரை கேட்டாலே தமிழக சுகாதாரத்துறை தற்போது அலறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா அலறல் டிப்தீரியா’ காய்ச்சல் பாதிப்பு கார்னி பேக்டீரியம் என்ற ஒரு வகை பாக்டீரியா தொற்றுகளால் பரவுகிறது. 1920 - 1924ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்த காய்ச்சல் பல பேரின் உயிரினை விழுங்கி உள்ளது. அப்போதே அமெரிக்க அரசு தடுப்பூசி கண்டுபிடித்து தனது மக்களை பாதுகாத்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் 1970ம் ஆண்டுகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. சுதாரித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள் அத்தனை பேருக்கும் தடுப்பூசி போட்டு இந்த பாக்டீரியாவை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். பாதிப்புகள் பலவிதம்: கார்னி பேக்டீரியத்தால் மெட்டிஸ், கிராவிஸ், இன்டர்மீடியஸ் என 3 வகைகளில் பாதிப்புகள் உருவாகும். ‘கிராவிஸ்’ வகை பாக்டீரியா தான் அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த பாக்டீரியா ஒருவரது உடலில் தொற்றியவுடன் உடனே பாதிப்பினை ஏற்படுத்தி விடாது. 3 முதல் 5 நாள் வரை அவரது உடலில் பரவும். இதனை ‘இன்குபேஷன் பீரியட்’ என்பார்கள். அதன் பின்னர் தொண்டை வலி, சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற சாதாரண சளிக்காய்ச்சல் போல் அறிகுறிகள் தென்படும். தொண்டை வலி ஏற்படும். சாப்பிட முடியாது. தொண்டை கரகரப்பு, காய்ச்சல், தலைவலி ஏற்படும். முதல் நாளிலேயே டாக்டரிடம் சென்றால் அவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். முறையான சிகிச்சை எடுத்தால் உடனே குணமாகி விடும். சிகிச்சை எடுக்க தவறினால் உயிரிழப்பு ஏற்படும்.

எதிர்ப்பு சக்தி இருந்தால்... இதனை விட கொடுமை என்னவென்றால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று இருப்பதே தெரியாது. அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் பல மாதங்கள் வரை கூட பாதிப்பு தென்படாது.  ஆனால் அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவிக்கொண்டே இருக்கும். இது காற்றில் பரவும். தொடுவதன் மூலமும் பரவும். குறிப்பாக ஒரு சேரில் கார்னி பேக்டீரியம் தொற்று ஏற்பட்டவர்கள் அமர்ந்தால், அந்த சேரிலும், அவர் மூச்சுக்காற்றிலும், தும்மல் மூலமும் வெளியேறிய பாக்டீரியா அந்த அறையிலும் 3 முதல் 6 மாதங்கள் வரை உயிர் வாழும். இதற்குள் பலருக்கு பரவி விடும். இதனால்தான் சுகாதாரத்துறை அலறுகிறது. பாதிப்புகள் என்னென்ன: கார்னி பேக்டீரியத்தின் முக்கிய குறி உள்தோல் தான். வாய், தொண்டை, உள்நாக்கு, உணவுக்குழல், மலக்குடல், பிறப்பு உறுப்புகளில் உள்தோல் இருக்கிறது. இது மிருதுவாக இருக்கும். இதில் தொற்றும் பாக்டீரியா மளமளவென வளரும். குறிப்பாக உடல் உள் உறுப்புகளில் வேகமாக வளரும். தவிர ஒருவித நச்சுப்பொருளை உற்பத்தி செய்யும். தொண்டையில் சவ்வு படலம் போல் படரும். அப்போது தொண்டை, டான்சில் பகுதியில் உள்ள உடல் செல்கள் இறக்கும். தொண்டையில் நிணநீர் சுரப்பிகள் வீங்கும். தொண்டையில் வீக்கம் ஏற்படும். இது தொண்டையை அழுத்தி மூச்சுக்குழலில் சுவாச பிரச்னை ஏற்படுத்தும். நோயாளி மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு உயிரிழக்க நேரிடும். மேலும், தோல்களில் சிவப்பு வட்ட வடிவில் புண் ஏற்படும்.

அதில் இருந்து தண்ணீர் வடியும். தவிர இந்த பாக்டீரியா ஒருவித நச்சுப்பொருளை உருவாக்கும். இந்த நச்சுப்பொருள் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் இரண்டையும் பாதிக்கும். கல்லீரல், சிறுநீரகம் செயல் இழக்கும். இருதயம் வீங்கி சீரற்ற துடிப்புகளை உருவாக்கி செயல் இழப்பு ஏற்படும். நரம்பு மண்டலம் பாதிக்கும். உடல் உறுப்புகள் செயல் இழக்கும். கண் பாதிப்பு, வெள்ளை விழிப்படலம் பாதிக்கும். பார்வையிழப்பிற்கு கூட வாய்ப்பு உண்டு. ஆண்களை விட பெண்களுக்கு கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் நோயாளியை மீட்பது சிரமம் என்ற நிலை உருவாகி விடும்.
எழுபதுகளில் என்ன நிலை: கடந்த 1970ம் ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவ, சுகாதாரத்துறைகளில் வளர்ச்சி தொடங்கிய நேரம். அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் அரசு பணியில் இருந்த டாக்டர்கள் கூறியதாவது: மற்ற வைரஸ் நோய்களை போல் இல்லாமல் இந்த பாக்டீரியா நோயினை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன.

ஆண்டிபயாடிக் கொடுத்தால் உடனே செயல்பட்டு பாக்டீரியாக்களை அழித்து விடும். ஆனால் பாக்டீரியா உருவாக்கிய நஞ்சினை அழிக்க ‘டிப்திரிக் ஆண்டி டாக்ஸின்’ கொடுக்க வேண்டும். இந்த ‘டிப்திரிக் ஆண்டிடாக்ஸின்’ ஒரு நபருக்கு 20 ஆயிரம் யூனிட் முதல் ஒரு லட்சம் யூனிட் வரை கொடுத்துள்ளோம். சராசரியாக ஒரு நோயாளிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட் ஆண்டிடாக்ஸின்’ தேவைப்படும். சிலருக்கு ‘ஆண்டிடாக்ஸின்’ ஒவ்வாமை ஏற்படுத்தும். இதுதான் டாக்டர்களுக்கு சவாலான காலக்கட்டம். திடீரென பரவுவது ஏன்? அரசு மருத்துவமனையிலோ, தனியார் மருத்துவமனையிலோ குழந்தை பிறந்த 3வது மாதம், 4வது மாதம், 5வது மாதம் அடுத்து ஒன்றரை வயது, ஐந்து வயதில் இந்த தடுப்பூசி போட்டு வருகின்றனர். அடுத்து 10வது வயதிலும், 16வது வயதிலும் பூஸ்டர் டோஸ் போட வேண்டும். குழந்தை பருவத்தில் தடுப்பூசி போடுவதில் பல பேர் விடுபட்டு விடுகின்றனர். இதற்கு மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையினை மட்டும் காரணம் சொல்ல முடியாது. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையும் காரணம் தான்.

இதனால் 30 ஆண்டுகளுக்கு முன்னரே முற்றிலும் ஒழிக்கப்பட்ட இந்த நோய், தற்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. அதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் கண்டறிந்து விடுவதால் இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதில்லை. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட பாதிப்புகளை தென்பட்டவுடன் உரிய மருத்துவர்களை அணுகி இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சிறுவர்கள் என்று இல்லாது பெரியவர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். உலகளாவிய தடுப்பு முறையை கொண்டு வந்து தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

டாக்டர்கள் சொல்வது என்ன?


டாக்டர்கள் சிலர் கூறியதாவது, ‘‘தற்போது உருவாகும் புதுப்புது நோய்களை கண்டறிவதில் தமிழக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையிடம் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறைகளில் போதுமான அளவு நோய் பரிசோதனை முடிவுகளை கண்டறியும் உள்கட்டமைப்புகள் இல்லை என்பது தான் இதற்கு முக்கிய காரணம். சுகாதார, மருத்துவத்துறைகள் இணைந்து போதுமான அளவு நோய் எதிர்ப்பு பரிசோதனைக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கி விட்டாலே, அனைத்து சிக்கல்களும் பாதியளவு குறைந்து விடும். தவிர மக்கள் பதற்றமடைவார்கள் என்பதால் சுகாதார, மருத்துவத்துறையினர் ரகசியம் காக்கின்றனர். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாவிட்டாலும், தனியார் மருத்துவமனைகளிலோ, தங்களது குடும்ப டாக்டர்களிடமோ ஆலோசனை பெற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் சுமைகளில் பாதி குறைந்து விடும். சில மருந்து கம்பெனிகள் தரம் குறைந்த மருந்துகளை தயாரிப்பது, அதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் இதனை விட பெரிய அபாயமாக உருவெடுத்து வருகிறது. மருந்துகளை விற்க சிலர் தவறான வதந்திகளை பரப்புவதும், தற்போது ஒரு பெரிய சிக்கல் நிறைந்த விஷயமாக மாறி வருகிறது’*. இவ்வாறு கூறினர்.

தீவிரமடைந்தால் பல நூறு கோடி செலவாகும்


சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 1970ம் ஆண்டுகளில் டிப்தீரியா பாதிப்பு ஏற்பட்டாலும், சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கைகளால் 1990ல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் டிப்தீரியா பாதிப்பு அதிகரித்து வருவதால், இதன் தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை மருந்துகள் தயாரிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. தற்போது சிறுவர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பினை ஏற்படுத்துவதால், மாநிலம் முழுவதும் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அத்தனை குழந்தைகளுக்கும், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டு வருகிறோம். தற்போது ஒவ்வாமை ஏற்படுத்தாத நவீன டிப்திரிக் ஆண்டிடாக்ஸின்’ வந்து விட்டது. இதன் விலை மிக அதிகம். இதனால் சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகரிக்கின்றன. இந்தநோய் அதிகம் பரவினால் சிகிச்சை அளித்து குணப்படுத்த தமிழக அரசு பலநூறு கோடி ரூபாய்களை செலவிட வேண்டியிருக்கும். தவிர தற்போது அதிகரித்துள்ள மக்கள் நெருக்கம் நோய் பரவும் வேகத்தை அதிகரிக்கும். எனவே நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மிக வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசியால் தப்பிக்கலாமா?

தடுப்பூசி போட்டவர்கள் எல்லாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும் என்று கூற முடியாது. அப்படி தடுப்பூசி போட்டவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதா என்பதை கண்டறியும் வசதிகளும் நம்மிடம் இல்லை. ஆண்டிபாடி டைட்டர்’ என்ற உடலில் நோய் எதிர்ப்பு திறன் பரிசோதனைக்கூடத்தை அத்தனை அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் உருவாக்க வேண்டும். மருந்து, தடுப்பு மருந்து, ஆண்டிபயாடிக், ஆண்டிடாக்ஸின்கள் தயாரிப்பில் அதிகளவில் போலிகள் வருவதும், அதனை நம்மால் கண்டறிய முடியாததும் பெரும் தலைவலியான விஷயம் ஆகும்.

10 ஆண்டுக்கு ஒருமுறை...

ஒருமுறை தடுப்பூசி போட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டு வரை பலன் தரும். அடுத்து இதற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல குறையும். எனவே 10 ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் இந்த தடுப்பூசி போட வேண்டும். எல்லோர் உடலிலும் ஒரே மாதிரியான கிரகிக்கும் சக்தி, நோய் எதிர்ப்பு திறன் இல்லை என்பதால், ஒவ்வொருவரும் தங்கள் உடம்பின் நோய் எதிர்ப்பு திறனை முறையாக பரிசோதித்து அதற்கேற்ற வகையில் தடுப்பு மருந்துகள் போட வேண்டும். தற்போது ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை டெட்டனஸ் தடுப்பூசி போடும் வழக்கம் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் உள்ளது. இதனை டெட்டனஸ், டிப்தீரியா என்ற தடுப்பூசியாக நிரந்தரமாகவே மாற்ற வேண்டும்.

கொடுத்தாலும் சிக்கல்...


ஆண்டிடாக்ஸின்’ ஒவ்வாமை ஏற்பட்டாலும் கொடுத்தே ஆக வேண்டும். வேகமாக கொடுத்தாலும் ஒவ்வாமையால் நோயாளி இறந்து விடுவார். கொடுக்காவிட்டாலும் இறந்து விடுவார். ஆனால் உயிரை காக்க கொடுத்தே  ஆக வேண்டும். எனவே அந்த நோயாளியை டாக்டர் தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்து விடுவார். அவரது உடலில் குளுக்கோஸ் மூலம் ஆண்டிடாக்ஸினை மெல்ல, மெல்ல ஏற்றுவார். இப்படி ஏற்றி  அந்த நோயாளியை மீட்டார். 1970ம் ஆண்டுகளில் மக்கள் தொகை குறைவு என்பதால் பரவும் தன்மை குறைந்தது. அரசு மருத்துவமனைகளில் ஆண்டிபயாடிக்குகளும், ஆண்டிடாக்ஸின்களும் குவிந்து கிடக்கும். சிகிச்சை கொடுத்து மீட்டு விடுவார்கள். இன்று நிலை அப்படியல்ல. 30 ஆண்டுகளாக பாதிப்பு இல்லாததால் இந்த நோயினை மறந்து விட்டார்கள். இதற்கான தடுப்பு மருந்துகளையும் மறந்து விட்டனர்.

‘சோதனை’ தீரவில்லை


டிப்தீரியா பாக்டீரியாவிற்கு தடுப்பு ஊசி உள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள 8 கோடி பேருக்கும் இதனை போடுவது சாத்தியமில்லாத விஷயம். அப்படியே போட்டாலும் பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் திரும்ப, திரும்ப பாதிக்கும். தவிர இந்த பாக்டீரியா 6 மாதம் வரை  காற்றிலும், வெட்டவெளியிலும் உயிர் வாழக்கூடியது. தவிர டிப்தீரியா வைரஸ் தொற்றினை நோயாளியின் தொண்டைப்பகுதியில் இருந்தோ சளி, ரத்த மாதிரிகளில் இருந்தோ சாம்பிள் எடுத்து உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான ஆய்வக வசதிகள் போதிய அளவு இல்லை.

Tags : After 30 years, full swing again , 'Diphtheria'
× RELATED கனமழையால் துபாய்க்கு 2-வது நாளாக விமான சேவை ரத்து