×

2008ம் ஆண்டு கொண்டு வந்த திட்டமும் கேள்விக்குறி மருத்துவக் கழிவுகளை கையாளுவதில் அதிகாரிகள் அலட்சியம் : தொற்று கிருமிகளால் உயிரினங்களுக்கு ஆபத்து

வேலூர்: 2008ம் ஆண்டு மருத்துவ கழிவுகளை கையாளுவதற்காக கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தொற்றுக்கிருமிகள் பரவி உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குப்பைகளை கையாளுவதில் திடக்கழிவு மேலாண்மையை விரிவுப்படுத்த வேண்டியது கட்டாயம். ஆனால், குப்பைகளை அகற்றுவதில் பல ஆண்டுகளாக பெரும் சவால் நீடித்து வருகிறது. இதில் குறிப்பாக மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலைகளால் பல ஆயிரம் டன் மருத்துவக்கழிவுகள் குவிந்து விடுகிறது. இதை பத்திரமாக அப்புறப்படுத்தி மறுசுழற்சி செய்வது, அழிப்பது அவசியம். காரணம், தூக்கி வீசப்படும் மருத்துவக் கழிவுகளில் இருந்து தொற்றுக்கிருமிகள் காற்றில் பரவுகிறது. மனிதர்களுக்கு மருந்து செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியில் இருந்து 33 வகையான பாதிப்புகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் எய்ட்ஸ் உள்ளிட்ட 3 கொடிய நோய்களும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மருத்துவ கழிவுகள் கையாளுவதற்கான திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அதன்படி, காலாவதியான மருந்துகளும், வேதிப்பொருட்களும், ஊதா நிற பெட்டியில் பயன்படுத்தப்பட்ட ஊசி, ஆபரேசனுக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான பொருட்களும் கொட்டப்பட வேண்டும். இதில் உடல் உறுப்பு கழிவுகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி எரிக்கப்படும்.

கூர்மையான பொருட்கள் ஆழமான சிமென்ட் தொட்டியில் போடப்பட்டு தொட்டி நிரம்பியவுடன் சீல் வைக்கப்பட்டு மருத்துவக்கழிவு முத்திரை வைக்கப்படும். நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள், மாத்திரைகள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் குறையும். குறிப்பாக காற்றில் பரவும் காசநோய் போன்ற நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.கடந்த 2008ம் ஆண்டு மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து மருத்துவ கழிவுகளை கையாளுவதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்ப ஆங்காங்கே பொது இடங்களிலும், ஏரி, குளம், ஆறுகளிலும் இன்று மருத்துவ கழிவுகள் சர்வசாதாரணமாக கொட்டப்படுகிறது.

இதன் மூலம் மருத்துவக்கழிவுகளை கையாளுவதற்கான விதிமுறைகள் 50 சதவீதம் கூட பின்பற்றப்படுவதில்லை என்ற உண்மை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதன் விளைவுகளால் நீர்நிலைகளில் கலந்தும், காற்றிலும் நச்சுக்கிருமிகள் பரவி மனித இனத்துக்கு மட்டுமின்றி பூமியில் உயிரினங்களே வாழ முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். எனவே, இனியாவது அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கையாளுவதில் உரிய விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை..

Tags : Authorities negligent , handling medical waste ,2008
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...