×

துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலையில் பல ஆண்டுகளாக உயிரை பிடித்துக்கொண்டு பயணம் செய்யும் பொதுமக்கள்

சென்னை: அதிமுக பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து இளம்பெண் பலியான துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலையில், சாலை விரிவாக்கம், மேம்பாலம், மழைநீர் வடிகால்வாய் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாலும், அங்குள்ள கல்யாண மண்டப விழாக்களின்போது கார்களின் ஆக்கிரமிப்பாலும் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் பல ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் பயணம் செய்கிறார்கள். இதற்கு, அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் ஆகும்.
சென்னை புறநகர் பகுதியான துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் ரேடியல் சாலை, தற்போது 200 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலை சுமார் 10 கி.மீ. தூரம் ஆகும். அதே நேரம் இந்த சாலையில், பல இடங்களில் மழைநீர் வெளியேற சாலையின் குறுக்கே ஆங்காங்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் இதுபோன்ற பாலம் பணிகள் நடைபெறுவதால், இந்த சாலைகளில் வழியாக தினசரி செல்லும் வாகனங்களை ஒரு பக்கமாக திருப்பி விடப்படும். அதேபோன்று, அதே சாலையில் கோவிலம்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இப்படி, இந்த சாலை முழுவதும் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள். ஒரு பக்கம் சாலை விரிவாக்கம், ஒரு பக்கம் மழைநீர் வடிகால்வாய்க்கான பாலம், ஒரு பக்கம் மேம்பாலம் என ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் பல ஆண்டுகளாக பயணம் செய்யும் நிலை உள்ளது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், பாலம் கட்டும் இடத்தில், வாகனங்கள் திருப்பி விடும்போது சரியான சாலை இல்லாமல் கரடு முரடான பாதையில் செல்லும் நிலை உள்ளது. அடுத்து, சாலையில் ஆங்காங்கே பேரிகாட் தடுப்பு வேறு. தண்ணீர் லாரிகளின் படையெடுப்பு ஒரு பக்கம். அடுத்து 100 அடி சாலையை 200 அடி சாலை விரிவாக்கம் என்று சொன்னாலும், இந்த விரிவாக்கம் செய்த சாலைகள் முழுவதும் லாரிகள், பஸ்கள், கார்கள் ஆக்கிரமிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் தினசரி இந்த சாலை வழியாக செல்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

இந்த சாலையின் இரண்டு பக்கமும் புதிது புதிதாக சில கல்யாண மண்டபங்கள், பார்ட்டி ஹால், ஓட்டல்கள், ஷாப்பிங் மால் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் எந்த ஒரு கட்டிடத்திலும் பார்க்கிங் வசதி இல்லை. கல்யாண மண்டபங்களுக்கு வரும் கார்கள் அனைத்தும் சாலையில்தான் பார்க் செய்யப்படுகிறது. திருமணம் நடக்கும்போது கல்யாண மண்டபங்கள் முன் குறைந்தபட்சம் 100 கார்களுக்கு மேல் சாலையில் பார்க்கிங் செய்வதை பார்க்க முடியும். அப்போது, இந்த சாலையில் செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் ஊர்ந்துதான் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டியதிருக்கும். இதை எந்த அதிகாரிகளும், போக்குவரத்து காவலர்களும் கண்டுகொள்வதில்லை. 100 அடி சாலை 200 அடி சாலையாக மாற்றப்பட்டு வருவதால், இதுபோன்ற வர்த்தக நிறுவனங்களுக்குதான் பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த மாதம் தண்ணீர் லாரி ஸ்டிரைக் நடைபெற்றது. அப்போது, இந்த சாலையில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லாமல், லாரி ஓனர்களுக்கும், திருமண மண்டப முதலாளிகளுக்கும் வசதி செய்து கொடுக்கத்தான் கோடிக்கணக்கான பணத்தை அரசு செலவு செய்து சாலையை விரிவாக்கம் செய்கிறதா என மக்கள் கேட்கின்றனர்.

 சட்ட விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்திருந்ததால்தான் சுப என்ற இளம்பெண் நேற்று முன்தினம் இந்த ரேடியல் சாலையில் பயணம் செய்தபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காலையில் அலுவலக நேரங்களிலும், மாலை முதல் இரவு வரை அலுவலகம் விட்டு வீடு செல்பவர்களுக்கும் குறிப்பாக துரைப்பாக்கம், பெருங்குடி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த சாலையில்தான் பயணம் செய்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு நாள் பயணம் செய்யும்போதும், உயிரை பிடித்துக்கொண்டுதான் பயணிக்கிறார்கள்.
 இந்த விபத்தின் மூலமாவது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாடம் கற்றுக்கொண்டு, மழைநீர் பாலம், சாலை விரிவாக்கம் பணி, உள்ளிட்ட வசதி செய்து கொடுக்க வேண்டும். பாலம் பணிகளை ஆமை வேகத்தில் செய்யாமல் விரைவில் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும். இல்லையென்றால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியபடி, இன்னும் பலரின் மனித ரத்தத்தை இந்த சாலைகள் உறிஞ்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags : Civilians ,road ,Duraipakkam-Pallavaram , For many years , Duraipakkam-Pallavaram road, Civilians who travel, capture life
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...