×

திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடக்கம் 30 லட்சம் இலக்கையும் தாண்டி புதிய உறுப்பினர்களை சேர்ப்போம்

* சென்னையில் முகாமை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், 30 லட்சம் இலக்கையும் தாண்டி புதிய உறுப்பினர்களை சேர்ப்போம் என்று கூறினார். சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சென்னை தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி முகாமை மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, முகாமை பார்வையிட்டார்.
தொடர்ந்து விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் கடந்த மாதம் 25ம் தேதி திமுக இளைஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரையிலான இரண்டு மாதம் காலத்திற்குள் புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இது எப்படி நடக்கும் என்று நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். இளைஞர் அணியினர் நினைத்தால் செய்து முடிப்போம் என்று நான் உறுதி அளித்தேன். இளைஞர் அணியினர் துணையோடு எங்களுடைய தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட 30 லட்சம் இலக்கையும் தாண்டி புதிய உறுப்பினர்களை சேர்ப்போம்.

பள்ளி, கல்லூரி பருவத்தில் இருந்து திமுக தலைவருடன் நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்துள்ளேன். எனவே ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. அதனால் தான் இந்த முகாமை ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடங்கி வைத்துள்ளேன். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும். அதற்கு முழு காரணமாக இந்த ஆயிரம் விளக்கு தொகுதி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, கு.க.செல்வம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேனாம்பேட்டையில் முகாமை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திமுக இளைஞர் அணியின் தலைமை அலுவலகமான அன்பகம், ராயபுரம் அறிவகம், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை பார்வையிட்டார். உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி : -ஜெ.அன்பழகன் பேச்சு


சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் பேசுகையில், “ யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு, இளைஞர் அணியினருக்கு வழிகாட்ட வேண்டும். இதை சொல்வதால் காக்கா பிடிப்பதாக யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாட்டின் ஒரு பெயரை கூட சொல்ல முடியாத ஒரு முதல்வர் வெளிநாடு செல்கிறார். இப்படிப்பட்டவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” என்றார்.

Tags : DMK , DMK Youth Team Membership, Admissions Campaign
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி