×

ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு ஆன்லைனில் எழுத வற்புறுத்துவதற்கு எதிர்ப்பு : அரசு பரிசீலனை செய்ய கோரிக்கை

சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுகளை ஆன்லைனில் எழுத வற்புறுத்துவது பட்டதாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பழைய முறைப்படி தேர்வை நடத்த வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12ம் தேதி வெளியிட்டது. தேர்வு செப்டம்பர் 27 முதல் 29ம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தேர்வு ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. கம்ப்யூட்டர் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத முடியும். மற்ற பிரிவுகளில் படித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, அறிவு இருப்பது கடினம். கம்ப்யூட்டரை பயன்படுத்துவதில் குறைந்த அறிவே உள்ளது.

மொத்தம் 150 கேள்விகளுக்கு 3 மணிநேரத்தில் கம்ப்யூட்டரில் பதில் தர வேண்டும். இது மிக கடினமான விஷயம். கீ ஆன்சரை சரிபார்க்கவும் முடியாது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகூட ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுவதில்லை. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்படவில்லை.  ஏற்கனவே, கடந்த ஜூன் 23ல் நடத்தப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் ஆன்லைனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்  அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. அந்த தேர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டது. கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் தேர்வை நடத்த அனுபவமும் அதற்கான கட்டமைப்பும்  இல்லாமல் எப்படி தேர்வை நடத்த முடியும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு 3 லட்சம்பேர் விண்ணப்பித்துள்ளனர். கம்யூட்டர் அறிவு இல்லாமல் எப்படி இந்த தேர்வை எழுத முடியும்.
ஏற்கனவே, உரிய வேலை வாய்ப்பு இல்லாமல் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். எங்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான பயிற்சி இல்லாத நிலையில் எங்களால் எப்படி ஆன்லைன் மூலம் தேர்வு எழுத முடியும்.

இதனால், கிராமப்புறத்தில் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து ஏற்கனவே நடத்தும் தேர்வைப்போல் எழுத்து தேர்வாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆன்லைன் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூரை சேர்ந்த கிருத்திகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.தமிழ்வேல் ஆஜராகி, கம்ப்யூட்டர் பயிற்சி இல்லாதவர்களால் ஆன்லைனில் தேர்வு எழுதுவது கடினம். இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை வரும் 25ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tags : teachers , Resistance to force teachers, write online , Request for government review
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...