×

தவறான கணக்கீடால் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிய தமிழகம் 89 அணைகளுக்கு நீர் வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

* இனி குடிநீர், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கட்டுப்பாடு

சென்னை: தவறான கணக்கீடால் தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம் சிக்கிய நிலையில், 89 அணைகளுக்கு நீர் வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 89 அணைகள் உள்ளன. இதில், மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், உள்ளிட்ட 15 முக்கிய அணைகள் அடக்கம். இந்த அணைகளின் மொத்த கொள்ளளவு 238.58 டிஎம்சி ஆகும். இந்த அணைகளில் இருந்து தான் தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவையை 75 சதவீதம் வரை பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 25 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. இந்த நிலையில், அணைகளில் இருந்து குடிநீர் தேவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அணைகளில் இருந்து பாசன தேவைகளுக்கு தண்ணீர் தர வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் அதற்கான வரைவு அறிக்கை என்பது இதுவரை தயாரிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் அணைகளில் தண்ணீர் இருக்கும் ேபாது குடிநீருக்கு ஆண்டுதோறும் திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு எவ்வளவு, அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது குடிநீருக்கு திறக்க வேண்டிய தண்ணீர் அளவு எவ்வளவு என்பது குறித்தும், பாசனத்திற்கு அந்தந்த கால கட்டங்களில் திறக்க வேண்டிய அளவு எவ்வளவு என்பது தொடர்பாகவும் வரைவு அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், அணைகளில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் தொடர்பாக நீர் வரைவு அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் அணை பாதுகாப்பு இயக்ககம் சார்பில் கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. அணைகளில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கு தண்ணீர் திறக்க முடியாமல் அல்லாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழையால் அணைகள் நீர்மட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், தேவையின்றி தண்ணீரை வீணாக செலவு செய்ததால் அடுத்து வரும் காலகட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் இருக்க நீர் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை விவரங்கள் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அறிக்கையின் பேரில் இனி அணைகளில் இருந்து குடிநீர், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது’ என்றார்.

Tags : Tamil Nadu , Intensity of drafting water ,draft report,89 dams ,Tamil Nadu,water shortage
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...