×

நலத்திட்டங்களுக்காக கொடுக்கப்படும் நிலங்கள் அரசால் வழங்கப்பட்டது என்று ஆவணங்களில் பதிவிட வேண்டும்

* நில நிர்வாக ஆணையருக்கு தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: கல்வி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக வழங்கப்படும் நிலங்களை ஆவணங்களில் பதிவு செய்யும்போது “அரசால் வழங்கப்பட்டது” என்று பதிவிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று நில நிர்வாக ஆணையத்திற்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்சிடி முத்தையா ெசட்டியார் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசு கடந்த 1931ல் 2 காணி 11 கிரவுண்ட் நிலத்தை (ஒரு காணி என்பது 1 ஏக்கர் 32 சென்ட் ஆகும்) பள்ளியை நடத்துவதற்காக கொடுத்தது. இந்த நிலத்தை பள்ளியின் குழு தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என்று பள்ளிக்குழு தலைவரின் தாய் விளம்பரம் செய்தார். இந்நிலையில், இந்த நிலம் தொடர்பான தகவல்களை கேட்டு வி.சக்திவேல் பாண்டியன் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பள்ளியின் செயலாளரிடம் மனு கொடுத்தார். ஆனால், அதற்கு உரிய தகவல்களைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மாநில தகவல் ஆணையத்தில் அவர் மனு கொடுத்தார். இந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையர் சு.முத்துராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ஆஜராகி, தனக்கு முழுமையான தகவல்களை பள்ளி செயலாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் தரவில்லை என்று வாதிட்டார். அப்போது, பொதுத் தகவல் அலுவலர் மற்றும் பள்ளியின் செயலாளர் சார்பில் ஆஜரானவர், மனுதாரர் தங்கள் பள்ளியை தொடர்ச்சியாக தவறான நோக்கத்துடன் கணித்து வருகிறார். பள்ளியை மூடிவிட்டு அந்த பள்ளி அமைந்துள்ள நிலத்தை விற்க முடிவு செய்துள்ளதாக தவறான யூகங்களை பரப்பி வருகிறார் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தகவல் ஆணையர் சு.முத்துராஜ் அளித்த உத்தரவு வருமாறு: பள்ளிக்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில், எப்போதாவது பள்ளி செயல்படாமல் இருந்தால் அந்த நிலம் இருக்கின்ற நிலை மாறாமல் அப்படியே அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. சட்டப்படி அந்த நிலம் பள்ளி மூடப்படும்போது அரசால் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும்.

எனவே, மாநிலத்தின் நில உடமைக்கு பொறுப்புள்ள அமைப்பான நில நிர்வாக ஆணையம், வழக்கில் கூறப்பட்டுள்ள இடம் அரசால் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. பள்ளி இவ்விடத்தை பயன்படுத்தவில்லை என்றால் நிலம் அரசால் எடுத்துக்கொள்ளப்படும் என்ற தகவலை இந்த நிலம் தொடர்பான தகவல்களுடன் நில நிர்வாக ஆணையரக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.பள்ளிக்கு வழங்கப்பட்ட சர்வே எண்ணிற்கான வருவாய்துறை ஆவணங்களின் பதிவுகளில் அந்த நிலம் அரசால் வழங்கப்பட்ட நிலம் என்று பதிவுகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் வில்லங்க சான்றுகளிலும் அரசால் வழங்கப்பட்ட நிலம் என்று பொதுமக்கள் அறியும் வகையில் பதிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நில நிர்வாக ஆணையர் மற்றும் பத்திரப்பதிவு துறை தலைவர் ஆகியோர் உத்தரவு கிடைத்த ஒரு மாதத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Lands ,state , Lands provided, welfare schemes ,recorded in documents ,state has provided
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...